Asianet News TamilAsianet News Tamil

பதிலுக்கு பதில் திருப்பி கொடுத்த ஆப்கானிஸ்தான் – ஆஸியை வீழ்த்தி வரலாற்று சாதனை!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

Afghanistan Beat Australia by 21 Runs Difference in 48th Match of Super 8 in T20 World Cup 2024 rsk
Author
First Published Jun 23, 2024, 10:18 AM IST

ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டி செயிண்ட் லூசியாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரஹ்மானுல்லா குர்பாஸ் 60 ரன்களும், இப்ராஹிம் ஜத்ரன் 51 ரன்களும் எடுத்தனர். பவுலிங்கைப் பொறுத்த வரையில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஆடம் ஜம்பா 2 விக்கெட்டும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். டிராவிஸ் ஹெட் 0 ரன்னிலும், டேவிட் வார்னர் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் 12 ரன்களில் வெளியேறினார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் 11, டிம் டேவிட் 2, மேத்யூ வேட் 5, பேட் கம்மின்ஸ் 3, அஷ்டன் அகர் 2, ஆடம் ஜம்பா 9 என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கிளென் மேக்ஸ்வெல் மட்டும் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியாக ஆஸ்திரேலியா 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா விளையாடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று ஆப்கானிஸ்தான் விளையாடிய 2 போட்டிகளில் ஒரு தோல்வி, ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.

மேலும், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடிய 6 போட்டிகளில் முதல் வெற்றியை ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில், முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் குவித்தது.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது தனிமனிதனாக போட்டியை தனது தோளில் சுமந்து கொண்டு விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். அதோடு இரட்டை சதம் விளாசி புதிய சரித்திர சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்திருந்தால் தொடரிலிருந்து வெளியேறும் நிலை இருந்தது. ஆனால், வெற்றியோடு திரும்ப வந்து கடைசியில் டிராபியை வென்று சாதனை படைத்தது. தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்துள்ளது. பவுலிங்கை பொறுத்த வரையில் ஆப்கானிஸ்தான் அணியில் குல்பதீன் நைப் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். நவீன் உல் ஹக் 3 விக்கெட்டும், அஸ்மதுல்லா உமர்சாய், முகமது நபி, ரஷீத் கான் தலா ஒரு விக்கெட் எடுத்துக் கொடுத்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios