ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து தலா 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. சவுத்தாம்ப்டனில் நடந்த 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இங்கிலாந்து அணி வென்றது.

இதையடுத்து மான்செஸ்டரில் ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 2வது போட்டி நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கவுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பலவீனமாக இருக்கிறது என்று ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள கில்கிறிஸ்ட், ஆஸ்திரேலிய அணி கடந்த சில ஆண்டுகளாகவே மிடில் ஆர்டரில் ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிவருகிறது. மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சிக்கல் உள்ளது. மற்ற அணிகள் மிடில் ஓவர்களில் நன்றாக ஸ்கோர் செய்யும் நிலையில், ஆஸ்திரேலிய அணி மிடில் ஓவர்களில் ஸ்கோர் செய்ய திணறுவதுடன், விக்கெட்டுகளையும் இழக்கிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கூட அப்படித்தான் பேட்டிங் ஆர்டர் சரிந்தது. ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பலவீனமாக இருப்பதை எதிரணிகளும் உணர்ந்திருக்கின்றன. எனவே இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணி பெரும்பாலும் ஃபின்ச் மற்றும் வார்னரையே அதிகமாக சார்ந்திருக்கிறது. அவர்களை விட்டால் ஸ்மித். இவர்கள் மூவரும் சொதப்பும்பட்சத்தில், மிடில் ஆர்டர் வீரர்கள் பல நேரங்களில் சரிந்துவிடுகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டரில் மிட்செல் மார்ஷ் மட்டுமே தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி நிச்சயமற்ற தன்மையில் ஆடிவருகின்றனர். எனவே தான் கில்கிறிஸ்ட் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.