ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட். ஆஸ்திரேலிய அணியில் 1996ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டு வரை ஆடிய கில்கிறிஸ்ட், 96 டெஸ்ட் மற்றும் 287 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் ஆடி 5570 ரன்களையும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ஆடிய கில்கிறிஸ்ட், 9619 ரன்களையும் குவித்துள்ளார்.

அதிரடி தொடக்க வீரரான கில்கிறிஸ்ட், ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி சிறப்பான தொடக்கத்தை 10 ஆண்டுகாலம் அமைத்து கொடுத்தவர். 1999, 2003, 2007ம் ஆண்டுகளில் ஹாட்ரிக் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்து ஆடியவர் கில்கிறிஸ்ட். 

மிகச்சிறந்த மற்றும் அதிரடியான பேட்ஸ்மேனான கில்கிறிஸ்ட், தனது கெரியரில் தான் எதிர்கொண்டதிலேயே மிகவும் கடினமான பவுலர்கள் யார் யார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய கில்கிறிஸ்ட், எனது கெரியர் முழுவதுமே என்னை டார்ச்சர் செய்தவர் ஹர்பஜன் சிங் தான். ஹர்பஜன் மற்று முத்தையா முரளிதரன் ஆகிய இருவரின் பவுலிங்கும் எதிர்கொள்ள மிகவும் கடினம் என்று கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். 

ஹர்பஜன் சிங், கில்கிறிஸ்ட்டுக்கு எதிராக ஆடியுள்ள 7 டெஸ்ட் போட்டிகளில் 10 முறை அவரை வீழ்த்தியுள்ளார். 2001 பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மட்டும் 3 முறை கில்கிறிஸ்ட்டை வீழ்த்தினார். அந்த தொடரில் தான் ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.