இந்திய அணியில் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர்கள் மிக மிகக்குறைவு. இர்ஃபான் பதானுக்கு பிறகு இந்திய அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. 

அதிரடியான பேட்டிங், அபாரமான ஃபீல்டிங், நல்ல ஃபாஸ்ட் பவுலிங் என அனைத்துவகையிலும் இந்திய அணிக்கு பங்களிப்பு செய்பவர். அணியில் இடம்பிடித்த ஆரம்ப காலத்தைவிட தற்போது அவரது ஆட்டம் மேம்பட்டிருக்கிறது. 

உலக கோப்பையில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. பெரியளவில் எதுவும் செய்யவில்லை என்றாலும் அனைத்து விதத்திலும் பங்களிப்பு செய்தார் ஹர்திக் பாண்டியா. ஹர்திக் பாண்டியா ஒரு ஆல்ரவுண்டராக இன்னும் மேம்பட வேண்டியிருக்கிறது. ஃபீல்டிங்கில் ஹர்திக் பாண்டியாவை குறைகூறவே முடியாது. ஆனால் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அவர் மேம்பட வேண்டியிருக்கிறது. 

இந்நிலையில், உலக கோப்பை நடந்துகொண்டிருந்தபோது, ஹர்திக் பாண்டியாவை தன்னிடம் அனுப்பினால் உலகின் சிறந்த ஆல்ரவுண்டராக மாற்றி காட்டுவேன் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். 

ஹர்திக் பாண்டியா ஆடுவதை பார்த்திருக்கிறேன். அவரது ஆட்டத்தை நன்கு உன்னிப்பாக கவனித்தேன். பேட்டிங்கின்போது அவரது உடலை பேலன்ஸ் செய்வதிலும், பெரிய ஷாட்டுகளை ஆடும்போது சில குறைபாடுகள் இருப்பதையும் பார்த்தேன். அவரது கால் நகர்த்தல்களிலும் சில சிக்கல்கள் உள்ளன. அவருக்கு நான் பயிற்சியளிக்க நேரிட்டால் அவரை உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக மாற்றி காட்டுவேன். ஹர்திக் பாண்டியாவை சிறந்த ஆல்ரவுண்டராக மேம்படுத்த நினைத்தால், அதற்காக நான் இருக்கிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்று ரசாக் தெரிவித்தார்.