தினேஷ் கார்த்திக் பேட்டிங் ஆடுவதை பார்த்து தனக்கு மீண்டும் கிரிக்கெட் ஆடும் ஆசை வந்துவிட்டதாக ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் 15வது சீசனில் ஆர்சிபி அணி அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்துவருகிறது. 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது ஆர்சிபி அணி. ஆர்சிபி அணி இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவிக்க முக்கிய காரணம் தினேஷ் கார்த்திக்.

தினேஷ் கார்த்திக் டெத் ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் ஆடி ஆர்சிபி அணிக்காக போட்டிகளை முடித்து கொடுத்துவருகிறார். இந்த சீசனில் இதுவரை ஆடிய 7 போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கின் ஸ்கோர் - 32*(14), 14*(7), 44*(23), 7*(2), 34(14), 66*(34) மற்றும் 13(8) ஆகும். அவரது சராசரி 210 மற்றும் ஸ்டிரைக் ரேட் 205 ஆகும்.

இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் அபாரமாக ஆடிவரும் நிலையில், அவரது பேட்டிங்கை பார்க்கும்போது, தனக்கு மீண்டும் களத்தில் இறங்கி ஆட வேண்டும் என்ற ஆசை வருவதாக டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி அணியின் முன்னாள் ஃபினிஷரும் மேட்ச் வின்னருமான ஏபி டிவில்லியர்ஸ், இந்த சீசனுக்கு முன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனால் இந்த ஐபிஎல்லில் அவர் ஆடவில்லை. அதனால் தான் ஃபினிஷராக தினேஷ் கார்த்திக்கை எடுத்தது ஆர்சிபி அணி. ஆர்சிபியின் நம்பிக்கையை வீணடிக்காமல் அதை பூர்த்தி செய்துவருகிறார் தினேஷ் கார்த்திக். சொல்லப்போனால் கடந்த 2 சீசன்களில் டிவில்லியர்ஸ் ஆடியதைவிட அதிரடியான இன்னிங்ஸ்களை ஆடி ஆர்சிபியின் வெற்றி நாயகனாக தினேஷ் கார்த்திக் ஜொலித்துவருகிறார்.

இந்நிலையில், தினேஷ் கார்த்திக் குறித்து பேசிய ஏபி டிவில்லியர்ஸ், தினேஷ் கார்த்திக் அவரது வாழ்வின் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். இந்த சீசனில் இதுவரை ஆர்சிபிக்கு 2-3 போட்டிகளை ஜெயித்து கொடுத்துவிட்டார். இவ்வளவுக்கும் அவர் நிறைய கிரிக்கெட் ஆடுவதில்லை. ஆனாலும் அடி நொறுக்கிவருகிறார். 360 டிகிரியிலும் பந்தை பறக்கவிடுகிறார். 

மீண்டும் களத்தில் இறங்கி ஆடவேண்டும் என்ற ஆசையை எனக்கு ஏற்படுத்தியிருக்கிறார் தினேஷ் கார்த்திக். என்னை ஆச்சரியமடைய செய்திருக்கிறார். மிடில் ஓவர்களில் நெருக்கடியான சூழல்களில் அருமையாக ஆடுகிறார். அவரது அனுபவத்துடன் சிறந்த ஃபார்மும் இணைந்துவிட்டதால் பட்டைய கிளப்பிவருகிறார். தினேஷ் கார்த்திக் அவரது ஃபார்மை தொடர்ந்தால், ஆர்சிபிக்கு இந்த சீசனில் நல்ல வாய்ப்புள்ளது என்று டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.