ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாகவும் நட்சத்திர பேட்ஸ்மேனாகவும் திகழும் ஆரோன் ஃபின்ச், டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்துவருகிறார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு பெற்ற ஒரு சில மாதங்களிலேயே டெஸ்ட் அணியிலிருந்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவால் தூக்கியெறியப்பட்டார். 

2018 மார்ச் மாதத்தில் தென்னாப்பிரிக்காவில் ஆஸ்திரேலிய அணி ஆடிய டெஸ்ட் தொடரின்போது, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித்தும் வார்னரும் தடை பெற்றதையடுத்து, தொடக்க வீரருக்கான இடம் ஆஸ்திரேலியாவில் காலியானதால், 2018ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார் ஃபின்ச். 

அதைத்தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியபோது, அந்த தொடரிலும் ஃபின்ச் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஃபின்ச் அந்த தொடரில் சரியாக ஆடவில்லை. 4 போட்டிகள் கொண்ட பார்டர்  - கவாஸ்கர் டிராபி தொடரின், முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஃபின்ச் ஆடினார். ஆனால் 3 போட்டிகளிலும் சேர்த்தே மொத்தமாக வெறும் 97 ரன்கள் மட்டுமே அடித்தார். 

இதையடுத்து கடைசி தொடரில் இருந்து ஃபின்ச் தூக்கியெறியப்பட்டார். ஃபின்ச் அந்த தொடரில் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங்கை திறம்பட எதிர்கொள்ள முடியாமல் திணறினார். குறிப்பாக பும்ராவின் பவுலிங்கில் படுமோசமாக திணறினார். பும்ரா அந்த தொடரில் ஃபின்ச்சை 2 முறை வீழ்த்தினார். பும்ராவிடம் விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே, அவரது பவுலிங்கில் மிகக்கவனமாக ஆடுவதாக நினைத்து மற்ற பவுலர்களிடம் விக்கெட்டை இழந்தார் ஃபின்ச். 

அந்த தொடர் முழுவதும் ஃபின்ச்சை தனது துல்லியமான வேகத்தால் மிரட்டினார் பும்ரா. இந்நிலையில், அந்த டெஸ்ட் தொடர் நடந்தபோது, பும்ராவை நினைத்து நள்ளிரவில் தூக்கத்திலிருந்து திடீரென விழித்திருப்பதாக ஃபின்ச் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஃபின்ச், பும்ரா என்னை மறுபடியும் அவுட்டாக்கிவிட்டதாக நினைத்து திடீரென நள்ளிரவில் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கிறேன் என்று ஃபின்ச் தெரிவித்துள்ளார். அந்தளவிற்கு பும்ரா, தனது பவுலிங்கின் மூலம் ஃபின்ச்சை மிரட்டியிருக்கிறார். 

Also Read - ஆர்சிபி வீரரை தொடர்ந்து கேகேஆர் வீரருக்கும் கொரோனா டெஸ்ட்.. தனிமைப்படுத்தப்பட்ட ஃபாஸ்ட் பவுலர்

அந்த டெஸ்ட் தொடரை 2-1 என வென்ற இந்திய அணி, முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.