கொரோனாவின் தாக்கத்தால் உலகமே வீட்டில் முடங்கியுள்ளது. மனித குலத்திற்கே கடும் சவாலாக திகழும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், அதிலிருந்து தற்காத்துக்கொள்ள தனிமைப்படுதலும் சமூக விலகலுமே ஒரே வழி என்பதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என உலகின் பல நாடுகளிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. 

உலகளவில் சமூக, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்துமே முடங்கிவிட்டன. கிரிக்கெட் போட்டிகள் உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜூலை மாதம் தொடங்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனவே உலக மக்களே வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர்கள் பலரும், டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர்.

அந்தவகையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் பதிலளித்தார். அப்போது, ரசிகர் ஒருவர், உங்களுக்கு பிடித்த இந்திய பவுலர் யார் என்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆரோன் ஃபின்ச், எனக்கு ஹர்பஜன் சிங்கின் பவுலிங் ரொம்ப பிடிக்கும். அதுவும் ஸ்பின்னிற்கு சாதகமான ஆடுகளங்களில் அவரது பவுலிங் அருமையாக இருக்கும் என்று தெரிவித்தார். ஃபின்ச், ஹர்பஜன் சிங்கை தேர்வு செய்தது யாரும் எதிர்பார்க்காத ஒன்றுதான்.

இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் எதிர்கொண்டதில் யாருடைய பவுலிங் மிகவும் கடினமானது? என்ற கேள்விக்கு ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் மிட்செல் ஜான்சனின் பவுலிங் தான், தான் எதிர்கொண்டதிலேயே கடினமான பவுலிங் என பதிலளித்தார்.

கடைசி ஓவரில் 8 ரன்களை தடுக்க வேண்டிய சூழலில், அந்த ஓவரை வீச, பும்ரா - ஸ்டார்க் ஆகிய இருவரில் யாரை அழைப்பீர்கள்? என்ற கேள்விக்கு இருவருமே சிறந்த பவுலர்கள் தான். இருவருமே தான். இருவரில் யாராகவும் இருக்கலாம் என்று ஃபின்ச் தெரிவித்தார்.