இன்சமாம் உல் ஹக், இந்திய வீரர்களுக்கு டி ஷர்ட்டுகளை அள்ளி வழங்கிய சம்பவத்தை நினைகூர்ந்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. 

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி என்றால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களை கடந்து, சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு வேற லெவலில் இருக்கும். இரு அணி வீரர்களுமே வெற்றி வேட்கையுடன் களத்தில் கடுமையாக மோதிக்கொள்வார்கள். ஆனால் களத்திற்கு வெளியே இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையே எப்போதுமே நல்ல உறவுதான் இருந்துவருகிறது. 

ஒருசில வீரர்களுக்கு இடையேயான சில மோதல்களை தவிர, பொதுவாக இரு அணி வீரர்களும் களத்திற்கு வெளியே நெருங்கிய நண்பர்கள். அதை, போட்டி முடிந்தபின்னர், ரசிகர்களே கண்கூடாக பார்த்திருக்கக்கூடும். ஒருமுறை யுவராஜ் சிங், ஷோயப் மாலிக்கெல்லாம் கூட்டமாக நின்று ஜாலியாக பேசியது வைரலானது. 

அந்தவகையில், அஃப்ரிடியை தவிர மற்ற அனைத்து வீரர்களுடனும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் நல்ல உறவு இருக்கிறது. அஃப்ரிடி மட்டும்தான் அவ்வப்போது அரசியல் ரீதியான, சித்தாந்த ரீதியான சர்ச்சை கருத்துகளை பேசுவதால், அவருடன் இந்திய வீரர்களுடனான உறவு பெரியளவில் சிறந்ததாக இல்லை. ஆனால் மற்ற பாகிஸ்தான் அணி வீரர்களுடன் எல்லா காலத்திலுமே சிறந்த உறவு இருந்திருக்கிறது. 

அதை பறைசாற்றும் வகையில், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையே உறவு குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஆகாஷ் சோப்ரா பகிர்ந்துள்ளார். 

”உண்மையாகவே பாகிஸ்தான் வீரர்கள் அனைவருமே நல்ல நண்பர்கள். நானும் அக்தரும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள். இன்றுவரை இருவரும் அடிக்கடி மணிக்கணக்கில் பேசுவோம். நான் ரொம்ப நேரம் ஃபோனில் பேசிக்கொண்டிருக்கிறேன் என்றால், அக்தருடன் தான் பேசுவேன் என்று என் மனைவி தெரிந்துகொள்வார். அந்தளவிற்கு ரொம்ப நேரம் பேசுவோம்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸில் இருவரும் வர்ணனையாளர்களாக இருந்ததால், அப்போது எங்களுக்கு இடையே நல்ல நெருக்கம் உருவானது. இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையே எந்த பிரச்னையும் இருந்ததில்லை. ஒரு சம்பவம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.. 2004ல் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தோம். அப்போது, முல்தானில் இன்சமாம்(bhai) எங்கள் அனைவருக்கும் நிறைய டி ஷர்ட்டுகளை கொண்டுவந்து கொடுத்தார். இன்சமாம் உல் ஹக்கிற்கு சொந்தமாக ஒரு கார்மெண்ட்ஸ் இருக்கிறது. அங்கிருந்து எங்களுக்காக நிறைய டி ஷர்ட்டுகளை கொண்டுவந்து கொடுத்தார் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.