இந்திய அணியின் ஆல்டைம் சிறந்த அதிரடி தொடக்க வீரர்களில் வீரேந்திர சேவாக் முக்கியமானவர். அதிரடி பேட்ஸ்மேனான சேவாக், முதல் பந்திலிருந்தே அடித்து ஆடி, எதிரணியை அல்லு தெறிக்கவிடுவார்.
 
ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங் என்ற பாரபட்சமே இல்லாமல் அனைத்து வகையான பவுலிங்கையும் அசால்ட்டாக அடித்து துவைக்கக்கூடியவர். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முச்சதம் விளாசியவர். 

கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவரான சேவாக், அவரது கெரியரின் தொடக்கத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்தவர். அதுவும் கெரியரின் தொடக்கத்தில் சரியாக ஆடியதில்லை. யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், தோனி ஆகிய வீரர்களை வளர்த்தெடுத்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தான், சேவாக்கின் கெரியரிலும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர். மிடில் ஆர்டரில் சரியாக ஆடாத சேவாக்கை தொடக்க வீரராக இறக்கிவிட்டது மட்டுமல்லாது, சேவாக் சரியாக ஆடாத காலங்களில் அவருக்கு ஆதரவாக இருந்து, தொடர் வாய்ப்பும் நம்பிக்கையும் அளித்து, சிறந்த இன்னிங்ஸை ஆடும்வரை காத்திருந்தவர் கங்குலி.

ஒருவழியாக, தொடக்க வீரராக சிறப்பாக ஆடி சேவாக் அணியில் நிரந்தர இடம் பிடித்தார். அதன்பின்னர் 10 ஆண்டுகள் அசைக்கமுடியாத இடத்தை பெற்றிருந்தார் சேவாக். 

இந்நிலையில், சேவாக் சரியாக ஆடாத ஆரம்பக்கட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். ”சேவாக் தொடர்ந்து சரியாக ஆடாமல் இருந்த நிலையில், ஒருநாள் கங்குலி சேவாக்கிடம் சென்று, நீ(சேவாக்) இன்றைக்கு சரியாக ஆடவில்லை என்றால், உன்னை இனிமேல் அணியில் எடுக்க முடியாது என்று கூறிவிட்டார். ஆனால் நல்வாய்ப்பாக அன்றைய தினம் சேவாக் சதமடித்ததால், அணியில் இடம்பெற்றார். கங்குலி, சேவாக் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருக்கு அவர்களது ஆரம்பக்கட்டத்தில் போதிய வாய்ப்பும் ஆதரவும் கொடுத்தார் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.