இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் என்ன நடக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு முதுகுப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருப்பதால் அவர் இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஹனுமா விஹாரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கோலி ஆடாததால் கேஎல் ராகுல் கேப்டன்சி செய்கிறார். இந்திய அணியில் கோலிக்கு பதிலாக விஹாரி ஆடுகிறார். அதைத்தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்திய அணி:

கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ்.

தென்னாப்பிரிக்க அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக் ஓய்வு அறிவித்துவிட்டதால், கைல் வெரெய்ன் விக்கெட் கீப்பராக எடுக்கப்பட்டுள்ளார். முல்டருக்கு பதிலாக ஆலிவியர் எடுக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணி:

டீன் எல்கர் (கேப்டன்), எய்டன் மார்க்ரம், கீகன் பீட்டர்சன், ராசி வாண்டெர் டசன், டெம்பா பவுமா, கைல் வெரெய்ன் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சென், ககிசோ ரபாடா, கேஷவ் மஹராஜ், ஆலிவியர், இங்கிடி.

இந்நிலையில், இந்த போட்டியில் என்ன நடக்கும் என்று ஆருடம் தெரிவித்துள்ளார் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. இதுகுறித்து கருத்து கூறியுள்ள ஆகாஷ் சோப்ரா, முதல் நாள் ஆட்டத்தில் 7 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகள் விழும். டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங்கே ஆடலாம். நன்றாக பேட்டிங் ஆடினால், முதலில் பேட்டிங் ஆடுவதே சிறந்தது. கடைசி இன்னிங்ஸில் விக்கெட் சவாலானதாக இருக்கும்.

இந்த டெஸ்ட்டில் 40 விக்கெட்டுகளும் விழுந்துவிடும். ஃபாஸ்ட் பவுலர்கள் 35 விக்கெட்டுகள் வீழ்த்துவார்கள். ஸ்பின்னர்களுக்கு இந்த டெஸ்ட்டில் வேலை எதுவும் இருக்காது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.