இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ள இந்திய அணியின் ஆடும் லெவனை பார்ப்போம். 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஜூன் 18-22ல் இங்கிலாந்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடிவிட்டு, அப்படியே இங்கிலாந்தில் இருந்து, இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆடுகிறது.

இதற்கிடையே இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. அந்த காலக்கட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தில் இருக்கும் என்பதால், அடுத்த லெவல் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது. 

வெள்ளைப்பந்து ஸ்பெஷலிஸ்ட் வீரர்களான தவான், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருடன் சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா உள்ளிட்ட வீரர்களை கொண்ட அணி இலங்கையை எதிர்கொள்ளும். 

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். இளம் அதிரடி வீரர்களான இடது கை வீரர் தேவ்தத் படிக்கல் மற்றும் வலது கை வீரர் பிரித்வி ஷா ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

3ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 4ம் வரிசையில் இஷான் கிஷன், 5ம் வரிசையில் சஞ்சு சாம்சன் ஆகிய மூவரையும் தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா, ஆல்ரவுண்டர்களாக பாண்டியா பிரதர்ஸை தேர்வு செய்துள்ளார். ஸ்பின்னர்களாக தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி மற்றும் ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரையும் ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார் மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரையும் தேர்வு செய்தார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த இலங்கை தொடருக்கான இந்திய டி20 அணி:

தேவ்தத் படிக்கல், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார்.