இவர் டி20 கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டார்..! இரட்டை சத நாயகனை விளாசிய முன்னாள் வீரர்
ஷுப்மன் கில் டி20 கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டுவரமாட்டார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 177 ரன்கள் என்ற இலக்கை அடிக்க முடியாமல் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதமடித்த இஷான் கிஷன் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக இரட்டை சதமடித்த ஷுப்மன் கில் ஆகிய இருவரும் தான் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தொடக்க வீரர்களாக இறங்கினர்.
177 ரன்கள் என்ற இலக்கை விரட்டியபோது ஷுப்மன் கில்(7) மற்றும் இஷான் கிஷன் (4) ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். ஷுப்மன் கில்லின் டி20 ரெக்கார்டு மோசமாக உள்ளது. ஐபிஎல்லில் 74 போட்டிகளில் ஆடி 1900 ரன்களை குவித்துள்ள ஷுப்மன் கில்லின் ஸ்டிரைக் ரேட் 125 தான். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 போட்டிகளில் ஆடியுள்ள ஷுப்மன் கில் 58 ரன் மட்டுமே அடித்துள்ளார்; ஸ்டிரைக் ரேட் 131 மட்டுமே.
ஷுப்மன் கில்லின் ஸ்டிரைக் ரேட் ஐபிஎல்லில் இருந்தே கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஆனால் ஒருநாள் போட்டிகளில் அவரது சிறப்பான ஆட்டத்தை புறக்கணிக்கமுடியாது என்பதால் டி20 போட்டியிலும் அவர் தொடக்க வீரராக இறக்கப்படுகிறார். ஆனால் அவரைவிட அபாரமான ஸ்டிரைக் ரேட்டை பெற்றுள்ள மற்றும் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுக்கவல்ல பிரித்வி ஷா பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டார்.
வெறும் இரண்டே ஆண்டில் தோனி, ரெய்னாவின் சாதனையை முறியடித்தார் சூர்யகுமார் யாதவ்
இந்நிலையில், ஷுப்மன் கில் குறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, ஷுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக ஆடிவருகிறார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் அவரது நம்பர் சரியில்லை. அவர் டி20 அணியில் ஃபிட் ஆவாரா என்பதை அவரே யோசிக்க வேண்டும். டி20 கிரிக்கெட்டில் அவர் சரியாக ஆடியதில்லை. இஷான் கிஷன் ஆடிய 11 டி20 போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 36 தான். ஷுப்மன் கில் மட்டுமல்லாது இஷான் கிஷனும் டி20 கிரிக்கெட்டில் சோபிக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் தான் அடுத்த போட்டியிலும் ஓபனிங்கில் ஆடுவார்கள் என்று நினைக்கிறேன். பிரித்வி ஷாவிற்கு வாய்ப்பில்லை என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.