ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை சிட்னியில் நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனும் அதிரடி தொடக்க வீரருமான ரோஹித் சர்மா ஆடாததால், தொடக்க வீரராக யார் இறங்குவார் என்பது குறித்து பேசப்பட்டுவருகிறது.

கேஎல் ராகுல் ஒருநாள் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டார். அதனால் தவானுடன் மயன்க் அகர்வால் தான் ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக இறங்குவார் என்பது கிட்டத்தட்ட உறுதியான விஷயம். ஆனால் ராகுல் தொடக்க வீரராக இறங்கினால், இரட்டை சதம் அடிப்பதற்கான வாய்ப்பு கூட இருப்பதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, மிகச்சிறந்த வீரரான கேஎல் ராகுல், தொடக்க வீரராக இறங்கினால், ஒருநாள் கிரிக்கெட்டில் அவரால் இரட்டை சதம் கூட அடிக்க முடியும் என என் மனம் சொல்கிறது. அவர் அசால்ட்டாக சதங்களை அடிக்கக்கூடிய வீரர். எனவே அவரால் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிக்கமுடியும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் 13வது சீசனில் டாப் ஸ்கோரர் ராகுல் தான். ஐபிஎல்லில் செம ஃபார்மில் அபாரமாக ஆடிய ராகுல், அதே ஃபார்மை ஆஸ்திரேலியாவிலும் தொடர்வார் என்பதில் சந்தேகமில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், சேவாக், ரோஹித் சர்மா ஆகிய மூவரும் இரட்டை சதம் அடித்துள்ளனர். ரோஹித் சர்மா ஒருவர் மட்டுமே 3 முறை இரட்டை சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ராகுலாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிக்க முடியும் என ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.