பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. டிசம்பர் 18 முதல் டி20 போட்டி தொடங்குகிறது. ஜனவரி 7ம் தேதியுடன் கடைசி டெஸ்ட் போட்டி முடிகிறது. 

கொரோனா நெறிமுறைகளின்படி, 14 நாட்கள் பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் நியூசிலாந்தில் குவாரண்டினில் இருந்து பலகட்ட கொரோனா பரிசோதனைகளுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதால், கடந்தன் 24ம் தேதியே நியூசிலாந்துக்கு சென்றுவிட்டனர்.

நியூசிலாந்தில் இறங்கியதுமே பாகிஸ்தான் அணியை சேர்ந்த அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், சர்ஃபராஸ் அகமது, ரொஹைல் நசீர், நசிம் ஷா, முகமது அப்பாஸ், அபித் அலி, டேனிஷ் அஜீஸ் ஆகிய ஆறு வீரர்களுக்கும் கொரோனா இருப்பது உறுதியானது.

3ம் நாள் மேற்கொள்ளப்பட்ட 2ம் கட்ட பரிசோதனையில் மேலும் ஒரு வீரருக்கு(7வது வீரர்) கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. 2ம் கட்ட பரிசோதனையில் ஒரேயொரு வீரருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியிருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஆறுதலளிக்கும் விஷயமாக இருந்தாலும், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு பாகிஸ்தானை சேர்ந்த 7 வீரர்களுக்கு கொரோனா உறுதியானது சற்று கடுப்பான விஷயம் தான்.