உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், 15 வீரர்களை கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

இந்திய அணியில் 12 வீரர்கள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டதுதான். நான்காம் வரிசை வீரர், மாற்று விக்கெட் கீப்பர் மற்றும் நான்காவது ஃபாஸ்ட் பவுலர் ஆகிய வீரர்கள் தான் இழுபறியாக இருந்தது. கடைசியில் நான்காவது ஃபாஸ்ட் பவுலராக யாரையுமே தேர்வு செய்யவில்லை. 

நான்காம் வரிசை வீரராக விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பவுலிங் ஆப்சன் கூடுதலாக கிடைப்பதுடன் அவர் நல்ல ஃபீல்டரும் கூட என்பதால் அவரை அணியில் எடுத்துள்ளனர். 

அதேபோல மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தான் எடுக்கப்படுவார் என கருதப்பட்ட நிலையில், தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துள்ளனர். ரிஷப் பண்ட்டுக்குத்தான் அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ரிஷப் பண்ட்டை எடுப்பதுபோன்ற தோற்றத்தைத்தான் தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் ஏற்படுத்தியது. ஆனால் ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் சொதப்பலாக இருந்ததால், நீண்ட நெடிய அனுபவம் மற்றும் சிறந்த விக்கெட் கீப்பிங்கை கருத்தில் கொண்டு தினேஷ் கார்த்திக் எடுக்கப்பட்டுள்ளார். 

உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால், கண்டிப்பாக நான்கு ஃபாஸ்ட் பவுலர்களுடன் செல்ல வேண்டும் என பல முன்னாள் வீரர்களும் அறிவுறுத்தினர். அதனால் தீபக் சாஹர் அல்லது நவ்தீப் சைனி ஆகிய இருவரில் ஒருவர் நான்காவது ஃபாஸ்ட் பவுலராக தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்திக் பாண்டியா மற்றும் விஜய் சங்கர் இணைந்து நான்காவது ஃபாஸ்ட் பவுலருக்கான பணியை செய்துவிடுவர் என்ற நம்பிக்கையில், நான்காவது ஃபாஸ்ட் பவுலர் எடுக்கப்படவில்லை. 

அதேநேரத்தில் வலைப்பயிற்சியின்போது பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசுவதற்காக தீபக் சாஹர், நவ்தீப் சைனி, அவேஷ் கான் மற்றும் கலீல் அகமது ஆகிய நான்கு ஃபாஸ்ட் பவுலர்களும் இங்கிலாந்து செல்கின்றனர். தீபக் சாஹர் மற்றும் நவ்தீப் சைனி ஆகிய இருவரும் முறையே சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்காக அபாரமாக பந்துவீசிவருகின்றனர். இவர்கள் நால்வரும் உலக கோப்பை அணியுடன் இங்கிலாந்து செல்கின்றனர்.