தோனி சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம். இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் தோனி. நெருக்கடியான சூழல்களிலும் பதற்றப்படாமல், நேர்மறையான சிந்தனையோடு வீரர்களை ஊக்கப்படுத்தி வெற்றியை வசப்படுத்துவதில் வல்லவர் என்பதால் கேப்டன் கூல் என தோனி அழைக்கப்படுகிறார். 

தோனி பெரும்பாலும் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தமாட்டார். கோபம் வந்தாலும் அதை அரிதினும் அரிதாகத்தான் வெளிப்படுத்துவார். அப்படி தோனி களத்தில் கடுங்கோபமடைந்த சில தருணங்களை பார்ப்போம். 

1. 2019 ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி ஒன்றில், கடைசி ஓவரில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்துகளில் 9 ரன்கள் எடுக்கப்பட்டது. மூன்றாவது பந்தில் தோனியை கிளீன் போல்டாக்கினார் ஸ்டோக்ஸ். எஞ்சிய 3 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஸ்டோக்ஸ் 4வது பந்தை ஃபுல் டாஸாக வீசினார். அந்த பந்தை அம்பயர் நோ பால் என அறிவிக்க முயன்று கையை நீட்டிவிட்டார். ஆனால் ஃபுல் டாஸ் உயரமாக செல்லும் நோ பாலை லெக் அம்பயர் தான் அறிவிக்க வேண்டும். பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு இறங்கி ஆடியதால் அவர் நோ பால் இல்லை என்று சொல்ல, ஆனால் மற்றொரு அம்பயர் நோ பால் கொடுக்க முயன்றதை சுட்டிக்காட்டி ஜடேஜா அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த பந்திற்கு நோ பால் கொடுக்கவில்லை என்றதும், அவுட்டாகி வெளியே சென்றுவிட்ட தோனி, கடும் கோபத்துடன் மீண்டும் மைதானத்துக்குள் வந்து அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  

களத்திற்கு வெளியே இருக்கும் வீரர் எந்த சூழலிலும்  களத்திற்குள் செல்லக்கூடாது. ஆனால் தோனி கடுங்கோபமடைந்து, அத்துமீறி களத்திற்குள் சென்று அம்பயர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அது நோ பாலா இல்லையா என்பது லெக் அம்பயர் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் மற்றொரு அம்பயர் அவசரப்பட்டதால் தான் சர்ச்சை எழுந்தது என்றாலும், தோனி உள்ளே சென்றது தவறு. தோனியின் கோபத்தை கண்டு பலரும் ஆச்சரியமடைந்தனர். தோனியா இப்படி கோபப்படுவது என்று அனைவரையும் வியக்கவைத்தார் தோனி.  தோனியின் இந்த அத்துமீறிய செயலுக்கு தண்டனையாக அவருக்கு போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது.

2. 2012 சிபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவுட் கொடுக்கப்பட்டு களத்தை விட்டு வெளியேறிச்சென்ற, மைக் ஹசியை, அது அவுட் இல்லை என்று ரிவியூவில் தெரிந்ததும், அவரை ஓடிச்சென்று மீண்டும் பேட்டிங் ஆட அழைத்துவந்தார் அம்பயர் பில்லி பௌடன். அதனால் செம கடுப்பான தோனி அம்பயர் பில்லி பௌடனுடன் கடும் வாக்குவாதம் செய்தார். கடுங்கோபமடைந்த தோனி, நியூசிலாந்தை சேர்ந்த அம்பயர் பில்லி பௌடனை தெறிக்கவிட்டார். தோனியின் கெரியரில் முக்கியமான சர்ச்சை சம்பவம் அது.

3. 2018ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் கடைசி ஓவரில் தோனி 2 ரன்கள் ஓடுவதற்கு அழைக்க, மறுமுனையில் பேட்டிங் ஆடிய மனீஷ் பாண்டே, தோனி அழைத்ததை கவனிக்காததால் 2 ரன்கள் ஓட முடியவில்லை. அதனால் கோபமடைந்த தோனி, களத்திலேயே மனீஷ் பாண்டே மீதான கோபத்தை வெளிப்படுத்தினார். மனீஷ் பாண்டேவை செமயாக திட்டினார்.