2026 T20 WC Schedule: 2026 டி20 உலகக்கோப்பை அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. முழு அட்டவணை, இந்தியா போட்டிகள் நடைபெறும் தேதி, இந்தியா, பாகிஸ்தான் மோதும் தேதி உள்ளிட்ட விரிவான விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
2026 டி20 உலகக்கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா, நேபாளம், இத்தாலி, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 20 அணிகள் விளையாடுகின்றன.
2026 டி20 உலகக்கோப்பை அட்டவணை
இந்த நிலையில், ஐசிசி 2026 டி20 உலகக்கோப்பை அட்டவணையை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதாவது 2026 டி20 உலகக்கோப்பை பிப்ரவரி 7ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 7ம் தேதியான தொடக்க நாளில் பாகிஸ்தான்-நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ்-வங்கதேசம், இந்தியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.
அனைவரும் எதிர்பார்க்கும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 15ம் தேதி கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டி மார்ச் 8ம் தேதி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஒருவேளை பாகிஸ்தான் பைனலுக்கு சென்றால் இறுதிப்போட்டி கொழும்புவில் நடக்கும்.
மொத்தம் 4 பிரிவுகள்; 20 அணிகள்
மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா அணிகள் உள்ளன. பி பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் அணிகளும், சி பிரிவில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், நேபாளம், இத்தாலி அணிகளும், டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளும் உள்ளன.
போட்டி சுற்றுகளின் நிலை
இதில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும். அரையிறுதியில் வெற்றி பெற்றும் இரண்டு அணிகள் பைனலுக்கு செல்லும். சூப்பர் 8 சுற்று போட்டிகள் பிப்ரவரி 21ம் தேதி முதல் தொடங்குகிறது.
2026 டி20 உலகக்கோப்பை முழு அட்டவணை இதோ:
இந்திய அணியின் ஆட்டங்கள் எப்போது?
இந்திய அணியின் ஆட்டங்களை பொறுத்தவரை பிப்ரவரி 7ம் தேதி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் மும்பையில் மோதுகிறது. பிப்ரவரி 12ம் தேதி நபிமீயாவிடன் புதுடெல்லியில் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்தியா பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 15ம் தேதி கொழும்புவில் நடக்கிறது. பிப்ரவரி 18ம் தேதி நெதர்லாந்துடன் குஜராத்தில் மோதுகிறது.
எந்தெந்த மைதானங்களில் போட்டிகள் நடக்கும்?
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம், எம்.ஏ. சிதம்பரம் மைதானம் (சென்னை), அருண் ஜெட்லி மைதானம் (புது தில்லி), வான்கடே மைதானம் (மும்பை), ஈடன் கார்டன்ஸ் மைதானம் (கொல்கத்தா) ஆர். பிரேமதாசா மைதானம் (கொழும்பு), சிங்கள விளையாட்டுக் கழக கிரிக்கெட் மைதானம் (கொழும்பு) மற்றும் பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம் (கண்டி) ஆகிய இடங்களில் டி20 போட்டிகள் நடைபெறும். பெங்களூரு, புனேவில் போட்டிகள் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.


