பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி தொடங்கியுள்ளது. 

மான்செஸ்டாரில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

இந்திய அணியில் காயம் காரணமாக தவான் ஆடாததால் ராகுல் தொடக்க வீரராக களமிறங்குகிறார். அதனால் ராகுல் இறங்கிவந்த நான்காம் வரிசையில் விஜய் சங்கர் இறங்கவுள்ளார். மற்றபடி எந்த மாற்றமும் அணியில் இல்லை. 

பாகிஸ்தான் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இளம் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடிக்கு பதிலாக ஸ்பின்னர் ஷதாப் கானும் ஆசிஃப் அலிக்கு பதிலாக இமாத் வாசிமும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். 

ஸ்பின்னர்களை நன்றாக ஆடும் இந்திய அணிக்கு எதிராக 2 ஸ்பின்னர்களுடன் இறங்கியுள்ளது பாகிஸ்தான். இவர்களை தவிர முகமது ஹஃபீஸ் மற்றும் ஷோயப் மாலிக் ஆகிய இரண்டு சீனியர் அனுபவ வீரர்களும் ஸ்பின் பவுலிங் போடுவார்கள். 

பாகிஸ்தான் அணியில் 20 ஆண்டுகால அனுபவ வீரரான ஷோயப் மாலிக், உலக கோப்பை தொடரில் இதுவரை பாகிஸ்தான் அணி ஆடிய ஒரு போட்டியில் கூட அவர் சரியாக ஆடவில்லை. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சோபிக்கவில்லை. 

பாகிஸ்தான் அணியின் முதல் போட்டியில் இமாத் வாசிம் ஆடினார். அவர் சரியாக ஆடாததால், அதற்கடுத்த போட்டிகளில் சீனியர் வீரர் மாலிக் எடுக்கப்பட்டார். ஆனால் மாலிக் ஒரு போட்டியில் கூட சரியாக ஆடவில்லை. ஷோயப் மாலிக் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். எனினும் உலக கோப்பை தொடரில் சரியாக ஆடவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கூட ரன்னே எடுக்காமல் டக் அவுட்டானார்.

எனவே ஷோயப் மாலிக்கை நீக்கிவிட்டு ஸ்பின்னர் ஷதாப் கானை சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஷதாப் கான் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் ஷோயப் மாலிக் நீக்கப்படவில்லை. ஏனெனில் மாலிக், இந்திய அணிக்கு எதிராக ஆடிய நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர். ரன் சேஸிங்கில் பலமுறை வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார். சூழலுக்கு ஏற்ப பேட்டிங் செய்யக்கூடிய மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர். எனவே இந்திய அணிக்கு எதிராக கண்டிப்பாக பயன்படுவார் என்பதால் அவரை அணியிலிருந்து நீக்கவில்லை. 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ் மாலிக்கை நீக்கிவேண்டும் என வலியுறுத்தியிருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு பின்னர் ஷோயப் மாலிக் பற்றி கேப்டன் சர்ஃபராஸிடம் கடுமையாக கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் எது எப்படி இருந்தாலும் இந்தியாவுக்கு எதிராக ஷோயப் மாலிக் ஆடுவதில் பாகிஸ்தான் அணி உறுதியாகவே இருந்துள்ளது. 

பாகிஸ்தான் அணி:

ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம், முகமது ஹஃபீஸ், சர்ஃபராஸ் அகமது(கேப்டன்), ஷோயப் மாலிக், இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், முகமது அமீர்.