வைபவ் சூர்யவன்ஷி எடுத்த 68 ரன்களில் 64 ரன்கள் பவுண்டரிகள் மூலமே வந்தன. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் வைபவ் சூர்யவன்ஷி தான் இந்திய அணியின் கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் போட்டியில், இந்திய இளம் அதிரடி சூறாவளி வைபவ் சூர்யவன்ஷி அதிரடி அரைசதம் அடித்தார். வெறும் 19 பந்துகளில் அதிரடி அரை சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி, 24 பந்துகளில் 10 சிக்சர், 1 பவுண்டரியுடன் 68 ரன்கள் விளாசி அவுட் ஆனார்.
இந்திய அணி சூப்பர் பேட்டிங்
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 245 ரன்கள் எடுத்தது. பின்பு பேட்டிங் செய்த இந்திய அணி 129 ரன்களுக்கு 2 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி பெறும் தறுவாயில் உள்ளது. 19 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த கேரள வீரர் ஆரோன் ஜார்ஜ் மற்றும் 24 பந்துகளில் 68 ரன்கள் எடுத்த கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரின் விக்கெட்டுகளை இந்திய இழந்தது.
கேப்டனான முதல் தொடரிலேயே வைபவ் சூர்யவன்ஷி அசத்தல்
பயாண்டா மயோலாவுக்கு எதிராக லாங் ஆஃபில் சிக்ஸர் அடித்து 19 பந்துகளில் அரைசதம் கடந்த வைபவ், பின்னர் தொடர்ந்து இரண்டு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். வைபவ் எடுத்த 68 ரன்களில் 64 ரன்கள் பவுண்டரிகள் மூலமே வந்தன. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் வைபவ் சூர்யவன்ஷி தான் இந்திய அணியின் கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்
முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி, ஜேசன் ரோவல்ஸின் சதத்தின் உதவியுடன் நல்ல ஸ்கோரை எட்டியது. தொடக்கத்தில் 96-4 என தடுமாறிய தென்னாப்பிரிக்காவை, ரோவல்ஸ் மற்றும் டேனியல் போஸ்மான் இணைந்த 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் மீட்டது.
ஆனால், டேனியல் போஸ்மானை (31) ஆர்.எஸ். அப்ரீஷ் ஆட்டமிழக்கச் செய்ததால் தென்னாப்பிரிக்கா மீண்டும் சரிந்தது. 113 பந்துகளில் 114 ரன்கள் எடுத்த ரோவல்ஸ், ஏழு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் அடித்தார். இந்தியாவுக்காக கிஷன் குமார் சிங் நான்கு விக்கெட்டுகளையும், அம்ப்ரிஷ் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்தியா 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


