கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 3 மாதங்களாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை. இந்நிலையில், அடுத்த மாதம் முதல் இங்கிலாந்தில் கிரிக்கெட் தொடர்கள் நடக்கவுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அடுத்த மாதம்(ஜூலை) 8ம் தேதி முதல் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 3 டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளன. 

அந்த டெஸ்ட் தொடர் ஜூலை 28ம் தேதி முடிகிறது. அதைத்தொடர்ந்து, ஜூலை 30ம் தேதியே இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக பாகிஸ்தான் அணி இங்கிலாந்திற்கு செல்கிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான 29 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி 2 வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. 

இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்வதற்கு முன் பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஏற்கனவே ஹைதர் அலி, ஹாரிஸ் ரௌஃப் மற்றும் ஷதாப் கான் ஆகிய மூவருக்கு கொரோனா உறுதியான நிலையில், மேலும் 10 வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்திருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஃபகார் ஜமான், இம்ரான் கான், காஷிஃப் பாட்டி, முகமது ஹஃபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகிய 7 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த 29 வீரர்களில் மொத்தம் 10 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 

கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்த மற்ற வீரர்களுக்கும் வியாழக்கிழமை(ஜூன் 25) மீண்டும் பரிசோதனை செய்யப்படவுள்ளது. பாகிஸ்தான் வீரர்களில் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகியிருப்பது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி இருக்குமா என்பது சந்தேகமாகியுள்ளது.