பிழைப்பை கெடுத்த நினைப்பு.. ஏன் நல்லதை மட்டும் நினைக்க வேண்டும்!
இன்பத்திலும் எப்போதும் நல்ல சிந்தனையே வேண்டும். கெட்ட சிந்தனை இருந்தால் அது பிழைப்பைக் கெடுத்துவிடும் என்பதை கதையில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
பாலைவனத்தில் வாலிபன் ஒருவன் வணிகர்களோடு பயணித்தான். இரவு நேரத்தில் வணிகர்கள் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். வாலிபனுக்கு பாலைவனப் பயணம் புதியது என்பதால், நடந்த களைப்பில் கண்ணயர்ந்து தூங்கி விட்டான். மறுநாள் காலை மற்றவர்கள் ஒட்டகங்களோடு கிளம்பிச் சென்று விட்டனர். வாலிபன் கண் விழித்துப் பார்த்தபோது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை.
துடித்துப் பிடித்து எழுந்து வணிகர்களை தேடி ஓடினான். கடும் வெப்பம்; மணற்புயல் வேறு வீசியது. அவனால் தாங்க முடியவில்லை. தன்னிடமிருந்த தண்ணீர் குவளையில் இருந்த கொஞ்ச நீரையும் குடித்துவிட்டான். நடக்க முடியாமல் கால்கள் தள்ளாட மயங்கி விழுந்தான்.
அவன் இறுதியாத்திரை அவன் கண் முன்னே மங்கலாக தெரிந்தது.ஈனக்குரலில், ‘‘கடவுளே என்னைக் காப்பாற்று’’ என்று கூறிக் கொண்டே சுயநினைவை இழந்தான். கொஞ்ச நேரத்தில் உணர்வு தட்டுப்பட, மெதுவாக கண்விழித்தான். தான் இன்னும் சாகாமல். இருக்கிறோமே, என்று ஆனந்தப்பட்டு ஆண்டவனுக்கு நன்றி சொல்லி, நிமிர்ந்து பார்த்தால், அவன் ஒரு நிழல்தரும் மரத்தின் அடியில் கிடப்பது தெரியவந்தது. “ஆகா… பிழைத்து விட்டோம். கொஞ்சம் தாகத்திற்கு தண்ணீர் கிடைத்தால் நன்றாக இருக்குமே” என்று நினைத்தான். உடனே அவன் முன்னே, தங்கக்குடத்தினில் நீர் இருந்தது. அதை எடுத்து குடித்தபிறகுதான் அவனுக்கு போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது.
நிழலும் கிடைத்து விட்டது. நீரும் கிடைத்து விட்டது. இதோடு, வயிற்றுக்கு உணவும் கிடைத்துவிட்டால், ஆண்டவனுக்கு கோடானுகோடி நன்றி கூறுவேன் என நினைத்தான். அவன் முன்னே அறுசுவை உணவும் இருந்தது. அதை தின்றுமுடித்தான். இப்போது உண்ட மயக்கத்தில் கண்கள் சொருகியது. அட மணற்பரப்பில் படுத்தால் நன்றாகவா இருக்கும். மெத்தையும், தலையணையும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆண்டவா! நிழலும், நீரும், உணவும் கொடுத்தாய். கூடவே ஒரு மெத்தையும் தந்தால் நன்றாக இருக்குமோ என்று எண்ணினான். அம்சதூளிகா மஞ்சம் அவன் முன்பு கிடந்தது.
மெத்தையில் ஏறிப்படுத்தான். ஆனாலும், இன்னும் ஏதோவொன்று குறையாகப்பட்டது. நடந்து அலைந்ததால் கால்களில் ஒரே வலியாக இருந்தது. இரண்டு கால்களையும் அமுக்கிவிட, 2 பெண்கள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான். அதன்படியே இரண்டு இளம்பெண்கள் அமர்ந்து, அவன் கால்களை அமுக்கிக் கொண்டிருந்தனர். சுகமான தூக்கம். வாழ்நாளில் அப்படியொரு தூக்கத்தை அவன் தூங்கியதே இல்லை.
விழிப்பு வந்தது; கூடவே தெளிவும் வந்தது. “கொஞ்ச நேரத்துக்கு முன்பு வரை, சாகப்பிழைக்கக் கிடந்தோம். அதன்பின் நினைக்க நினைக்க எல்லாம் கிடைத்தது.
அப்படியானால், இத்தனையும் தருவது யார்? இப்போது என் கால்களை அமுக்கும் இந்த பெண்கள் ஒருத்தி பேயாகவும், இன்னொருத்தி பிசாசாகவும் மாறி, நம்மை இரண்டு கூறாகப் பிய்த்து தின்றுவிட்டால்? நம்ப கதி என்னாவது என்று நினைத்து முடிக்கு முன், ஒருத்தி பேயாகவும், இன்னொருத்தி பிசாசாகவும் மாறி, அவனை பிய்த்து தின்று கொண்டிருந்தார்கள்.
மாதவிலக்கு நேரங்களில் பெண்கள் கோவிலுக்கு செல்ல கூடாது..காரணம் இதுதான்!
கேட்டதை எல்லாம் தரும் “கற்பக தரு” மரத்தின் கீழே தான் இதுவெல்லாம் நடந்தது. துன்பத்திலும், இன்பத்திலும் எப்போதும் நல்ல சிந்தனையே வேண்டும். கெட்ட சிந்தனை இருந்தால் அது பிழைப்பைக் கெடுத்துவிடும் என்பதை இந்தக் கதையில் இருந்து புரிந்து கொள்ளலாம்.