குலம் தழைக்க குலதெய்வ வழிபாடு
வாழ்க்கையில் உங்களுக்கு ஏதாவது பிரச்னையோ, கஷ்டமோ வரும்போது, ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போய் எந்த ஜோதிடரைப் பார்த்தாலும், அவர்கள் உங்களுக்கு சொல்லும் முதல் பரிகாரம், குலதெய்வ பூஜைதான். ஒருமுறை குலதெய்வ கோயிலுக்குப் போய் வழிபட்டு வந்துவிடுங்கள் என்றும் சொல்வார்கள். குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை தன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது. தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக அருள்பாலிக்கக் கூடியது குலதெய்வம்.
குல தெய்வ வழிபாடு என்பது இந்துக்களிடம் பழங்காலம் தொட்டே நடைமுறையில் இருந்து வருகிறது. ஒரு தெய்வத்தை அவர்களது முன்னோரைப் பின்பற்றி வழிவழியாக வணங்கி வருதல் குலதெய்வ வழிபாடு ஆகும். பூர்வீக ஊரில் இருப்பவர்களுக்கு குல தெய்வத்தை வழிபட எந்த சிக்கலும் இருக்காது. ஆனால், ஊரை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறி விட்டவர்களுக்கு, குல தெய்வ வழிபாடு செய்வது என்பது அரிதான ஒன்றாகிவிட்டது.
முன்பெல்லாம் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் நமது குலதெய்வம் பற்றியும், குலதெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றியும் நமக்கு எடுத்துச் சொல்வார்கள். ஆனால், இன்று சிலருக்கு குலதெய்வம் எது என்றே தெரியாமல் போய்விட்டது. இப்போது கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை மாறிவிட்டதால், குலதெய்வம் பற்றிய விவரங்களை குடும்பப் பெரியவர்களிடம் கூட கேட்டுத் தெரிந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தெய்வங்களில் மிக்க வலிமையுள்ள தெய்வமும் குலதெய்வம்தான். குலதெய்வமே நமக்கு அருளைத் தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களும் வேண்டுமெனில், குலதெய்வ வழிபாடு முக்கியம். குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம் கூடவே இருந்து வழிநடத்தும் சக்தி கொண்டது. ஒரு குடும்பத்தில் குழந்தைக்கு முதல் மொட்டை அடித்து, முடி காணிக்கை செலுத்துவது, குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது இன்றுவரை வழக்கமாக உள்ளது.
உங்கள் வீடுகளில் உள்ள பூஜை அறையில் உங்கள் குலதெய்வத்தின் படம் இடம் பெற வேண்டும். உங்களின் வேண்டுதல்களை உங்களின் குலதெய்வத்திடம் சொல்லி வேண்டினால் அனைத்து வேண்டுதல்களையும் அந்த குலதெய்வம் உங்களுக்கு தீர்த்துவைக்கும் ஒரு பாத்திரத்தில் அடிப்பக்கம் இல்லாமல் இருந்தால், அதில் எவ்வளவு தண்ணீர் பிடித்தாலும், பாத்திரத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காது. அதுபோலவே, எத்தனை தெய்வத்தை கும்பிட்டாலும், குலதெய்வ வழிபாடு இல்லையென்றால், எந்த பலனும் கிடைக்காது என்று முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்.
உங்கள் குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.