உலகின் முதல் சிவன்கோயில்.. மரகத நடராஜர் சிலை பற்றிய சுவாரஸ்ய வரலாறு தெரியுமா?

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோயிலும் தனித்துவமானது மற்றும் அவற்றின் பின்னால் சுவாரஸ்யமான வரலாறுகள் உள்ளன

Uthrakosamangai Temple Hisory Do you know the interesting history of the world's first Shiva temple..

இந்தியாவில், ஆயிரக்கணக்கான பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன. கோல்களுக்குச் செல்வதும் கடவுளை வணங்குவதும் ஒரு வாழ்க்கை முறை என்று மக்கள் நம்புகிறார்கள். கடவுளை வழிபடுவதும், சிவாலயங்களில் தியானம் செய்வதும் நம் மனதை ஒருமுகப்படுத்தி மன அமைதியை அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோயிலும் தனித்துவமானது மற்றும் அவற்றின் பின்னால் சுவாரஸ்யமான வரலாறுகள் உள்ளன. அந்த வகையில் உத்திரகோசமங்கை என்ற மங்களநாத சுவாமி கோயிலையும் அதன் வரலாற்றையும் பார்க்கலாம்.

உத்திரகோசமங்கை என்ற பெயர் எப்படி வந்தது?

உத்திரம் - சொற்பொழிவு, கோசம் - ரகசியங்கள் மற்றும் மங்கை - பார்வதி தேவி. சிவபெருமான் பார்வதிக்கு வேத ரகசியங்களைப் போதித்ததால் இத்தலம் உத்திரகோசமங்கை என்று பெயர் பெற்றது. மங்களநாத சுவாமி கோயில் என்றும் அழைக்கப்படும் உத்திரகோசமங்கை கோயில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மிகவும் பழமையான சிவன் கோவில்களில் ஒன்றாகும்.

இதுவே உலகில் தோன்றிய முதல் சிவன் கோவில் என நம்பப்படுகிறது. நவகிரகங்கள் தெரியாத பழங்காலத்தில் இங்கு சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் மட்டுமே இருந்ததால், இந்தக் கோயில் மிகவும் பழமையானது என்று நம்பப்படுகிறது. இக்கோயிலில் மங்களநாதர் சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் மற்றும் நடராஜர், சுயம்புலிங்கம், பைரவர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பாலபைரவர் சன்னதிகள் உள்ளன. கோவில் குளம் உள்ளது. இக்கோயில் ஏழு நிலை ராஜகோபுரங்கள் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்களைக் கொண்டது. இக்கோயில் அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வளவு பெருமை வாய்ந்த உத்தரகோசமங்கை கோயிலில் மரகத நடராஜர் சிலை அமைந்ததே சுவாரஸ்ய் நிகழ்வாகும்.

மரகத நடராஜர் சிலையின் வரலாறு

ராமேசுவரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மரைக்காயர் என்ற மீனவர் வறுமையில் இருந்தாலும், தினமும் உத்தரகோசமங்கை மங்களாத சுவாமியை வழிபட்டு வந்துள்ளார். பாய்மரப்படகு வைத்து மீன் பிடித்து தன் குடும்பத்தை நடத்தி வந்த மரைக்காயர், ஒருநாள் அவர் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது கடலில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது, பயங்கர இடி மின்னலுடன் பேய் மழை பெய்தது. அதனால் மரைக்காயரின் பாய்மர படகு திசை மாறிச் சென்றது. கடலின் நடுப்பகுதிக்கு படகு சென்று விட்ட நிலையில், அங்கிருந்த கடல்பாசி படிந்த பச்சை நிறத்துடன் கல்பாறையில் பாய்மரப் படகு மோதியது. படகு மோதிய வேகத்தில் அந்த பாறை அப்படியே சரிந்து 3 துண்டுகளாக படகில் விழுந்தது. சரியாக அதே நேரத்தில் புயல் காற்றும் பேய்மழையும், உடனே நின்று விட்டது.

இதையறிந்த மரைக்காயர் தன் உயிரை காப்பாற்றியது இந்த பாறைக்கல்தான் என்று நினைத்தார். எப்படியும் அந்த பச்சை கல்லையும், 2 கல் துண்டுகளையும் ஊர் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி பச்சை நிறக்கல் மற்றும் 2 கல் துண்டுகளுடன் படகை ஓட்டிக் கொண்டு பல நாட்கள் மண்டபம் வந்து சேர்ந்தார். காணாமல் போன மரைக்காயரைக் கண்டு அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் நிம்மதி அடைந்தனர்.

தான் கொண்டு வந்த பாசிபடிந்த பாறைக்கல்லை என்ன செய்வதென்று தெரியாமல், தன் வீட்டுக்கு முன் வாசல் படிக்கல்லாக போட்டு விட்டார். இந்த வாசல் படிக்கல்லின் மேல் ஆட்கள் நடக்க நடக்க நாளடைவில் கல்லில் படிந்திருந்த கடல் பாசிகள் முழுவதும் போய்விட்டது. இதனால் பளபளவென்று பச்சை நிறத்தில் மின்னியபடி மிக அழகாக கல் கிடந்தது. இதை கண்ட மரைக்காயர் குடும்பத்தினர் பச்சை நிற கல்லின் அழகைக் கண்டு இந்த கல்லை மன்னருக்கு கொடுத்தால் நமக்கு ஏதாவது பரிசு கொடுப்பார் என்று நினைத்து மன்னருக்கு தெரிவித்தனர்.

பாண்டிய மன்னன் தனது ஆட்களை மண்டபத்திலுள்ள மரைக்காயர் வீட்டுக்கு அனுப்பி பச்சை நிறக்கல்லை அரண்மனைக்கு எடுத்து வரும்படி உத்தரவிட்டார். அதன்படி மரைக்காயர் வீட்டில் உள்ள பச்சை நிறக்கல்லை பணியாட்கள் அரண்மனையில் சேர்த்தார்கள். அப்போது அந்த விலைமதிக்க முடியாத மரகத கல்லைக்கண்டு பாண்டிய மன்னன் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த பச்சை மரகத கல்லைக் கொண்டு உத்தரகோசமங்கை திருத்தலத்தில் நடராஜருக்கு சிலை வடிக்க வேண்டும் என்று மன்னர் முடிவு செய்தார். அதுவும் நடராஜரின் ஊத்துவதாண்டவம் நடனத்தை அப்படியே நாட்டியம் ஆடும்படி சிலை வடிக்க வேண்டும் என்பது மன்னரின் விருப்பமாக இருந்தது.

எனவே நடராஜர் சிலையை வடிக்க தலைசிறந்த சிற்பியை கொண்டு வரும்படி ஒற்றர்களுக்கு மன்னர் உத்தரவிட்டார். பாண்டியநாடு, சேரநாடு, சோழநாடு, நாஞ்சில்நாடு போன்ற நாடுகளில் மூலை முடுக்கெல்லாம் தேடியும் சிலை வடிக்கும் சிற்பி கிடைக்கவில்லை. இது மன்னருக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.

மன்னரின் கனவில் தோன்றிய ஈசன் இலங்கை வேந்தன் முதலாம் கயவாகு என்பவரின் அரண்மனையில் சிவபக்தனான ரத்தினசபாபதி என்ற தலைசிறந்த சிற்பி இருப்பதாக தெரிவித்தார். உடனே பாண்டிய மன்னன் இலங்கை வேந்தன் முதலாம் கயவாகுவை தொடர்பு கொண்டு, சிற்பியை அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்தார். அதன்படி ரத்தினசபாபதி என்ற சிற்பியை உத்தரகோசமங்கை திருத்தலத்துக்கு அழைத்து வந்து சேர்த்தார்கள். ஆனால் அவர் அவ்வளவு பெரிய மரகத கல்லை பார்த்தவும் மயங்கி விழுந்துவிட்டாராம். பின்னர் தன்னால் மரகத நடராஜர் சிலையை வடிக்க முடியாது என்று கூறி இலங்கைக்கு திரும்பிவிட்டார். இதனால் மன வருத்தத்துடன் உத்திரகோசமங்கை கோயிலில் மங்களேஸ்வரர் சன்னதி முன்பு நின்று மனமுருக வேண்டிக் கொண்டிருந்தார். அப்போது “ நான் மரகத சிலை வடித்து தருகிறேன் மன்னா” என்ற குரல் கேட்டது. அது வேறு யாருமில்லை, சித்தர் சண்முக வடிவேலர் தான். பின்னர் மரகத நடராஜர் சிலையை வடிக்கும் முழு பொறுப்பையும் மன்னவர் சண்முக வடிவேலரிடம் ஒப்படைத்தார். 

அந்த சிலை நடராஜர் உருவத்தில் பரதநாட்டிய கலையை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான சிலையாக இருந்தது. இந்த சிலை ஒளி வெள்ளத்தில் உயிர்ப்புடன் இருப்பது போல் தோன்றுவதை நாம் உணர முடியும். மேலும் அந்த சிலையில், மனித உடலில் உள்ளது போல் பச்சை நரம்புகள் இருப்பது போல் தத்ரூபமாக வடித்துள்ளார். நடராஜர் சிலையை நாம் நேரில் பார்க்கும்போது அச்சு அசலாக பரதநாட்டியம் ஆடுவது போன்று காட்சியளிக்கும்.

இந்த சிலையை நேரில் கண்டவர்கள் கண்ணைக் கவரவும், பார்த்தவர்கள் பரவசம் அடையவும், சிலை வடித்தவுடன் மக்கள் மற்றும் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. பச்சை மரதக கல்லினால் வடிவமைக்கப்பட்ட நடராஜர் சிலையின் மேல் சூரிய ஒளிபட்டு கோவிலே இரண்டாக பிளந்துள்ளது.

சிலையைப் பார்க்க வந்த பக்தர்கள் ஏற்படுத்திய பேச்சு சலசலப்பு சத்தமும், மேளத்தாள இசைகள், ஒலி, ஒளி முதலிய பேரொளிகள் நடராஜன் சிலை மேலேபட்டு அதிர்வுகள் ஏற்படுத்தின. இதை அறிந்த சிற்பி, எப்படி இந்த விக்கிரகத்தை காப்பாற்றுவது என்று நினைத்து மிக வேதனைப்பட்டு குழம்பிய நிலையில் ஈசன் காலடியில் மன்றாடி வழிமுறைகளைக் கேட்டார். உடனே ஒரு அசரீரி ஒலி மூலம் பேசிய சிவபெருமான் ‘ உத்தரகோசமங்கை திருத்தலத்தில் ஏற்கனவே பார்வதி விட்ட சாபத்தால் எனது உருவம் பொறிக்கப்பட்ட விக்கிரகம் பச்சை மரகத கல்லால் ஆனது. இந்த பச்சை மரகத கல் மேளதாளம் இசை, ஒலி, ஒளி சப்தம் தாங்காத தன்மை கொண்டது. மத்தளம் முழங்க, மரகதம் உடையும் என்ற சொல்லுக்கேற்ப எனது உருவச்சிலையை ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பால் பூச வேண்டும்.

பிறகு மார்கழி மாதம் பவுர்ணமி அன்று சந்தனத்தைக் கலைத்து ஒரு நாள் மட்டும் எனது முழு உருவத்தை பக்தர்கள் பார்க்கலாம் என்று கூறினார். எனது அனுமதி இல்லாமல் என் விக்கிரகத்தை மன்னரோ, மந்திரியோ, மக்களோ, திருடனோ, அரசியல்வாதிகளோ எடுத்துச் செல்ல முடியாது என்றும், அப்படி எடுக்க நினைப்பவர்களுக்கு உடனே பித்து பிடித்து விடும்" என்றார்.

அதன்படி இன்று வரை மார்கழி திருவாதிரை நாளில் நடராஜருக்கு ஒரு நாள் மட்டும் அர்ச்சனை செய்து சந்தனக்காப்பு முழுவதையும் அகற்றி சாதாரண அபிஷேகம் செய்வார்கள். இந்த கோயிலுக்கு சென்று உமா மகேஸ்வரர் சன்னதி முன் நின்று வழிபட்டால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும் என்பது ஐதீகம். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios