தைப் பூசம் 4-ம் தேதியா, 5-ம் தேதியா? எப்போது, எப்படி விரதம் இருந்து வழிபட்டால் முருகன் அருளை அள்ளி கொடுப்பார்
தைப்பூசம் பிப்ரவரி 4ஆம் தேதியா, 5ஆம் தேதியா என்பது குறித்து நிலவும் குழப்பங்களை தீர்க்க இந்த கட்டுரையை படியுங்கள்.
முருக பெருமானை வழிபடும் பக்தர்கள் தைப்பூச விரதத்தை 48 நாள்கள் கடைபிடிப்பர். மார்கழி மாதமே விரதம் இருக்க தொடங்கிவிடுவர். இந்த நன்னாளில் இறையன்னை பார்வதி தேவி, முருகனுக்கு ஞானவேல் வழங்கினார். இந்த காரணத்தால் தான் தைப்பூசம் அன்று வேலை வணங்குகிறார்கள். 'ஞானவேல் கொண்டே ஞானபண்டிதன் அசுரவதம் புரிந்தார்' என்பது புராண வரலாறு.
தைப் பூசம் அன்று முருகனுக்குரிய வேலை வழிபட்டால் கெட்ட சக்திகள் விலகிவிடும். வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டு, செல்வ செழிப்பாக வாழலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. தைப் பூசம் அன்று குரு பகவான், சிவபெருமான், முருகப் பெருமான் ஆகியோரை வழிபட்டால் நல்லது நடக்கும்.
தைப் பூசம் 4-ம் தேதியா, 5-ம் தேதியா?
2023-ம் ஆண்டுக்கான தைப்பூச நாள் விரதத்தை கடைபிடிக்க விரும்பும் நபர்கள் அந்த தேதியில் குழப்பம் அடைந்துள்ளார்கள். அதனால் தைப்பூசம் எந்த தினத்தில் கொண்டாடுவது, விரதங்களை என்று கடைபிடிப்பது என்பது குறித்த தெளிவில்லை. தைப் பூசம் 4-ம் தேதியா, 5-ம் தேதியா? என்பதை குறித்து குழம்பவே தேவையில்லை. இந்தாண்டு தைப்பூச நாள் பிப்ரவரி 05ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தான்.
பிப்ரவரி 4ஆம் தேதி இரவு 10.41 மணி தொடங்கி பிப்ரவரி 6ஆம் தேதி அதிகாலை 12.48 மணிவரை பெளர்ணமி திதி. இதே மாதிரி பிப்ரவரி 4ஆம் தேதி காலை 10.41 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 5ஆம் தேதி பகல் 01.14 மணி வரை பூசம் நட்சத்திரம் இருக்கிறது. இதன்படி பார்த்தால் பிப்ரவரி 05ஆம் தேதியில் தான் பெளர்ணமி நாள் முழுவதும் உள்ளது. ஆகவே தைப்பூச நாளாக பிப்ரவரி 5ஆம் தேதி தான் கருதப்படுகிறது.
தைப்பூசம் விரதம் இருக்கும் முறை
பிப்ரவரி 5ஆம் தேதி அன்று நாள் முழுவதும் பூச நட்சத்திரம் இருப்பதால் நீங்கள் காலை முதல் மாலை வரை முருகனை மனதுருகி நினைந்து விரதம் இருக்கலாம். இதற்கு அதிகாலையில் எழுந்து, நீராடி, நெற்றியில் திருநீறு பூசி முருகன் திருவுருவப்படத்திற்கு விளக்கேற்றுங்கள். காலை, மதியம் ஆகிய இருவேளைகளிலும் வெறும் பால், பழம் தான் எடுத்து கொள்ள வேண்டும். மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று வழிபடுங்கள். அந்த சமயம் முருகனை மட்டும் வழிபடாமல் அவருடைய வேலையும் வணங்குங்கள். வாய்ப்பிருந்தால் காலை, மாலை இருவேளையும் முருகப்பெருமானை தரிசனம் செய்யுங்கள். நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், பால் பாயசம் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை படைக்கலாம்.
இதையும் படிங்க: தினமும் வெங்காயத்துல டீ போட்டு குடித்தால்.. இத்தனை நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாம் தெரியுமா?
தைப்பூச விரத பலன்கள்
முருகனை தைப்பூசத்தன்று உபவாசம் இருந்து வழிபட்டால் உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். உங்களுடைய வீட்டில் செல்வம் பெருகும். தம்பதிகளிடையே ஒற்றுமை கிடைக்கும். தொட்ட காரியம் துலங்கும்.
இதையும் படிங்க: மகா சிவராத்திரி 2023: சிவபெருமானின் மகிமையை பெற எப்போது பூஜை, விரதம் கடைபிடிக்க வேண்டும்? முழுவிவரம்!