நவராத்திரியின் நான்காவது நாளில் வணங்க வேண்டிய துர்க்கையின் அவதாரம், தோற்றம், அவரின் முக்கியத்துவம், சிறப்பு அம்சங்கள் மற்றும் பூஜை முறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நவராத்திரி 4 ஆம் நாள்
இந்த வருடம் நவராத்திரியானது செப்டம்பர் 22 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 2 ஆம் தேதி நிறைவடைகிறது. நவராத்திரியின் நான்காவது நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். நவராத்திரியின் நான்காவது நாளான செப்டம்பர் 25 ஆம் தேதி கூஷ்மாண்டா தேவி வழிபட வேண்டியவர். கூஷ்மாண்டா என்ற சொல்லுக்கு “தன் புன்னகையால் பிரபஞ்சத்தை படைத்தவள்” என்பது பொருளாகும்.
கூஷ்மாண்டா தேவி
கூஷ்மாண்டா தேவையை வழிபடுவதன் மூலம் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி, நோய்கள் குணமாகி, ஆரோக்கியம் பெருகும் என்று நம்பப்படுகிறது. படைப்பின் ஆதாரமாக கருதப்படும் இந்த தேவியை வணங்குவதன் மூலம் படைப்பாற்றல் மற்றும் ஞானமும் அதிகரிக்கிறது. இவர் சூரியனின் ஒளியையும், ஆற்றலையும் பக்தர்களுக்கு அருள்கிறார். ஆரோக்கியம், செல்வம், மன அமைதி, ஆன்மீக உயர்வு ஆகியவற்றை பெறுவதற்காக நவராத்திரியின் நான்காவது நாளில் பக்தர்கள் இவரை வணங்குகின்றனர்.
கூஷ்மாண்டா தேவியின் தோற்றம்
இந்தப் பிரபஞ்சம் முழுவதும் இருள் சூழ்ந்து எந்த வடிவமும் இல்லாத நிலையில் உலகத்தை உருவாக்க சிவபெருமானுக்கு ஒரு சக்தி தேவைப்பட்டது. அப்போது கூஷ்மாண்டா தேவி தனது மெல்லிய புன்னகையால் பிரபஞ்சத்தை உருவாக்கியதாக புராணங்களில் கூறப்படுகிறது. எனவே இவரை ஆதி சக்தி என்றும், அனைத்து உயிர்களுக்கும் ஒளி தரும் தேவி என்றும் அழைக்கின்றனர். தேவிக்கு எட்டு கைகள் உண்டு. கைகளில் கலசம், வில் அம்பு, தாமரை, அமிர்தம், ஜபமாலை, சக்கரம், கோபுரம் ஆகியவற்றை ஏந்தி இருக்கிறார். இந்த எட்டு கைகள் அஷ்ட சித்தி (எட்டு வகையான சக்திகள்) மற்றும் நவ நிதி (ஒன்பது வகையான செல்வம்) ஆகியவற்றை குறிக்கின்றன.
நைவேத்யம்
கூஷ்மாண்டா தேவிக்கு உகந்த நிறம் ஆரஞ்சு ஆகும். எனவே இன்றைய தினம் ஆரஞ்சு நிற ஆடைகள் அல்லது ஆரஞ்சு நிற புடவைகள் உடுத்தலாம். தேவிக்கு ஆரஞ்சு நிற மலர்களால் அலங்காரம் செய்யலாம். செவ்வந்தி போன்ற மலர்கள் அம்பிகைக்கு மிகவும் உகந்தவை. இந்த நாளில் பூசணிக்காய் அல்வா அல்லது பூசணிக்காய் சேர்த்த உணவுகளை நைவேத்யமாக படைப்பது சிறப்பு. ஏனெனில் பூசணிக்காயும் தேவியின் அம்சமாக கருதப்படுவது உண்டு. அதேபோல் மாதுளம் பழம் மற்றும் மாதுளை முத்துக்களை படைப்பதும் விசேஷமானது.
பூஜை முறைகள்
அதிகாலையில் குளித்து, சுத்தமான ஆடைகளை அணிந்து பூஜை இடத்தில் தேவியின் சிலை அல்லது படத்தை வைக்கவும். விளக்கு ஏற்றி தீபராதனைகள் காட்ட வேண்டும். கலசத்திற்கு மாலை அணிவித்து புதிதாக சந்தனம், குங்குமம் இடவேண்டும். மலர்கள் தூவி அர்ச்சனை செய்ய வேண்டும். கூஷ்மாண்டா தேவி அஷ்டகம் அல்லது தேவி மஹாத்மியம் படிக்க வேண்டும். இல்லையெனில் “ஓம் கூஷ்மாண்டாயை நமஹ:” என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்கலாம். பூசணியால் செய்யப்பட்ட இனிப்புகள் அல்லது பிற நைவேத்தியங்களை படைக்கலாம். பழங்கள், தேங்காய், இனிப்பு வகைகள் ஆகியவற்றை அம்மனுக்கு படைத்து பின்னர் பிரசாதமாக பகிர்ந்து கொள்ளவும்.
கூஷ்மாண்டா தேவியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்
இறுதியாக கற்பூர ஆரத்தி செய்து தேவியை வணங்க வேண்டும். கூஷ்மாண்டா தேவியை வணங்குவதால் உடல் ஆரோக்கியம் மற்றும் நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும். மனதில் தெளிவு பிறக்கும். ஆன்மீக வளர்ச்சி கிடைக்கும். செல்வம் மற்றும் வெற்றி உங்களுக்கு குவியும். எதிர்மறை ஆற்றல்கள் விலகி நேர்மறை ஆற்றல்களைப் பெறுவீர்கள். இந்த பூஜையை பய பக்தியுடன் செய்ய வேண்டும். உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப எளிமையாகவோ அல்லது விரிவாகவோ செய்யலாம். நவராத்திரியின் நான்காவது நாளில் கூஷ்மாண்டா தேவியை வணங்கி உடல், மனம் மற்றும் ஆன்மீக ரீதியான பலன்களைப் பெறுங்கள்.
