கந்தசஷ்டி கவசம் பாடி பக்தர்களை பரவசப்படுத்திய இஸ்லாமிய மாணவி
சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கெண்ட ஹூனா என்ற இஸ்லாமிய மாணவி கந்த சஷ்டி கவசம் பாடலைப் பாடி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தினார்.
சென்னை புளியந்தோப்பு சிவராவ் சாலையில் கடந்த 30 ஆண்டுகளாக ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம் உள்ளது. புளியந்தோப்பு, பேசன் பிரிட்ஜ், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் இக்கோவிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம். இந்த ஆலயத்தின் நண்பர்கள் குழு சார்பாக நான்காம் ஆண்டு ஐயப்ப மலர் பூஜை நேற்று நடைபெற்றது.
இந்த மலர் பூஜையின் சிறப்பு அம்சமாக சபரிமலை போல 18 படிகள் அமைக்கப்பட்டு அதில் மாலை அணிந்தவர்கள் மட்டும் 18 படிகளில் ஏறி மேலே சென்று ஐயப்பனை தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஐயப்ப மலர் பூஜை விழாவில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பஜனை பாடல்கள் பாடி ஐயப்பனுக்கு மலர் பூஜை நடத்தினார்கள்.
புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 108 பெண்கள் திருவிளக்கு ஏந்தி சிறப்பு பூஜை செய்து ஐயப்பனை வணங்கினார்கள். அதனைத் தொடர்ந்து ஐயப்பனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையில் திடீர் மாற்றம்; தேர்வர்கள் மகிழ்ச்சி
சபரிமலை போல் சென்னையில் அமைக்கப்பட்ட இந்த அரங்கத்தை காண அந்த பகுதி மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வருகை தந்து வழிபாட்டில் ஈடுபட்டனர். புளியந்தோப்பு பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் மலர் பூஜையின் சிறப்பு அம்சமாக புளியந்தோப்பைச் சேர்ந்த அப்துல் முஜீத் என்பவரின் மகள் ஹூனா என்பவர் கந்த சஷ்டி கவசம் பாடலை பாடினார். இதனை அனைவரும் ரசித்து கேட்டு சிறுமியை பாராட்டினர்.