உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோயில் உள்ள வேப்பரமரத்தில் இருக்கும் பல்லியை தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோயில் உள்ள வேப்பரமரத்தில் இருக்கும் பல்லியை தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர். பல்லியை தரிசனம் செய்ய எதற்காக இவ்வளவு நேரம் காத்திருக்கிறார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆன்மீக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த உயிரினங்களில் பல்லியும் ஒன்று. பொதுவாக வீட்டில் ஏதேனும் பேசிக்கொண்டிருக்கும் போது பல்லி கத்தினால் அதை நல்ல சகுனம் என்று பெரியவர்கள் கூறுவதை கேட்டிருப்போம். அதே போல் பல்லி நம் வீட்டில் இருப்பதும் மகாலட்சுமியின் அம்சம் என்று கூறப்படுகிறது. பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிக்கிறது. அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பதை பொறுத்து பலன்கள் கிடைப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
பல்லி மகாலட்சுமியின் அம்சம் என்று கருதப்படுவதால் வட இந்தியர்கள் தங்கள் பூஜையறையில் வெள்ளியில் பல்லி செய்து வைத்து வணங்குகின்ற்னார். அதே போல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தங்கப் பல்லியை பலரும் பார்த்திருப்போம். காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோயில் ஒன்றில் இருக்கும் தங்கப்பல்லியை தொட்டு வணங்கினால் நல்ல விஷயங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.
நம் வீட்டின் வரவேற்பறையில் பல்லி இருந்தால் அது மங்களத்தையும் மகிழ்ச்சியையும் குறிப்பதாக நம்பப்படுகிறது. இதனால் பண வரவு அதிகரிக்கும், பண புழக்கத்தில் பற்றாக்குறை இருக்காது என்றும் நம்பப்படுகிறது.
மேலும் வீட்டின் பூஜை அறையில் 3 பல்லிகளை சேர்ந்து பார்ப்பது மிகவும் மங்களகரமான விஷயம் என்றும் சுப காரியங்கள் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. நல்ல செய்திகள் வீடு தேடி வரும் என்றும் நம்பப்படுகிறது.
அதே போல் வீட்டின் நிலை வாசலிலும் பல்லியை பார்ப்பது மிகவும் விசேஷமான ஒன்று.. கோயில்களில் உள்ள தல விருச்சங்களில் பல்லியை பார்ப்பது தேவர்களை பார்ப்பதற்கு சமம். அந்த வகையில் உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் கருவூரார் சன்னதிக்கு பின்புறம் ஒரு வேப்பமரம் உள்ளது.
கருவூரார் சன்னதியை சுற்றி வலம் வரும் பக்தர்கள் மரத்தில் பல்லி இருக்கிறதா என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஒருவேளை அந்த மரத்தில் பல்லியை பார்த்துவிட்டால் தாங்கள் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். இதனால் நாளுக்கு நாள் பல்லியை பார்க்க பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
உள்ளூர்வாசிகளை பார்த்து தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் இணைந்து அந்த பல்லியை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ராஜ ராஜ சோழனுக்கு ஆலோசனை கூறும் குருவாக கருவூரார் eன்று அழைக்கப்படும் கருவூர் சித்தர் இருந்துள்ளார். அவர் கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சமாதி பூண்டும், தஞ்சை பெருவுடையார் கோயில் பிரகாரத்தில் தன் சன்னதி கொண்டும் அருள் பாலித்து வருகிறர். இந்த கருவூரார் தான் மரத்தில் பல்லியாக காட்சி அளிப்பதாகவும் சில பக்தர்கள் நம்புகின்றனர்.
கரூவூராரின் ஆலோசனைப்படி இந்த பிரம்மாண்ட கோயிலை ராஜராஜ சோழன் கட்டியதாகவும் கூறப்படுகிறது. எனவே வியாழக்கிழமை தோறும் கருவூராரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்றும், அனைத்து வளங்களும் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. எனவே மரத்தில் பல்லி வடிவில் காட்சி தரும் கரூவூர் சித்தரை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனினும் சிலருக்கு மட்டுமே இந்த பல்லியின் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. பல்லியை தரிசனம் செய்பவர்கள் மகிழ்ச்சியுடன் செல்வதாகவும், பல்லியை தரிசிக்க முடியாதவர்கள் ஏமாற்றுதுடன் செல்வதாகவும் கூறப்படுகிறது.
