தீர்க்க சுமங்கலி வரம் தரும் ஆனி திருமஞ்சனம்.. சிதம்பரம் நடராஜரை இன்று தரிசித்தால் என்ன பலன் தெரியுமா?
சிதம்பரம் என்றதும் நம் நினைவிற்கு வருவது நடராஜப் பெருமான் தான். சிவாலயங்களில் நடராஜப் பெருமான், நடனக் கோலத்தில் காட்சி தருவார். சிதம்பரம் மற்றும் அனைத்து சிவாலயங்களிலும் நடராஜ பெருமானுக்கு ஆனி திருமஞ்சனம் மகா அபிஷேகம் நாளை அதிகாலை நடைபெற உள்ளது. ஆனி திருமஞ்சனம் என்றால் என்ன அது எப்படி யாரால் நடராஜருக்கு முதல் முதலில் நடத்தப்பட்டது என்று பார்க்கலாம்.
திருமஞ்சனம் என்றால் என்ன?
திருமஞ்சனம் எனும் சொல்லிற்கு மூலவரின் திருமேனிக்கு நறுமண எண்ணெய் பூசுவதாகும். மெய்யஞ்சனம் என்றால் உடம்புக்கு எண்ணெய் பூசுவது. திருமெய் அஞ்சனம் எனில் இறைவனின் திருமேனிக்கு எண்ணெய் பூசுவது. திருமெய் அஞ்சனம் என்ற சொல் மருவி திருமஞ்சனம் ஆயிற்று. பெருமாள் கோயில்களிலும் சிவாலயங்களிலும் இந்த திருமஞ்சனங்கள் விசேஷம்.
ஆனி அபிஷேகம்:
ஆனியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். வைகாசியில் அக்னி நட்சத்திர தருணம் எல்லாம் முடிந்து, வெப்பத்தில் தகிக்கும் திருமேனிக்கு, ஆனியில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. சிதம்பரத்தில் ஆடும் ஆனந்தத் தாண்டவம், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழிலையும் உணர்த்துகிறது. சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உள்ளது. இதேபோல், திருவாரூரில் தியாகராஜர் திருமேனியே ரகசியம் கொண்டது. இந்த இரண்டு பெருமான்களின் நடனத்தையும் பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனிவரும் தரிசிப்பதாக ஐதீகம்.
திருப்பதி பெருமாள் தாடையில் பச்சை கற்பூரம் வைப்பதற்கு இப்படி ஒரு கதை இருக்கா..?!
ஆனி திருமஞ்சனம் தரிசன பலன்:
திருமஞ்சன பலன் அற்புதமானது. திருமஞ்சனத்திற்கு உதவுவதும், கலந்து கொள்வதும் நமது பாவங்களைப் போக்கும். புண்ணிய பலன்களை வாரி வழங்கும். இறை மேனியை அபிஷேகம் செய்யும் போது அக்காட்சியை அவசியம் தரிசிக்க வேண்டும். அதனால் தான் சிதம்பரம் ஆனி திருமஞ்சன திருவிழாவை ஆனி தரிசனம் என்று அழைக்கிறார்கள்.
சிதம்பரம் நடராஜர்
ஆனி திருமஞ்சனம் ஸ்ரீநடராஜருக்கு உரிய அற்புதமான நாள். ஆகவே சிவனாரின் அனைத்துத் தலங்களிலும் ஆனி திருமஞ்சனம், முக்கியமான வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்க இவ்விழா நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. திருமஞ்சனம் என்றால் மங்கள ஸ்னானம். அதாவது மங்கள நீராட்டு. சிவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் திருமஞ்சனம் என்றே அழைக்கப்படுகிறது.
செல்வ வளத்தை அள்ளித்தரும் பச்சை கற்பூரம்... எங்கு வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்..?
தீர்க்க சுமங்கலி வரம்:
சாதாரணமாக குளியலுக்கு காரகர் நீர் ராசி அதிபதியான சந்திரன் ஆகும். ஆனால் திருமஞ்சனம் என்பது பலவித வாசனை பொருட்கள் மற்றும் குளிர்விக்கும் பொருட்களை கொண்டு செய்யப்படுவதால் திருமஞ்சனத்தின் காரகர் சுக்கிரன்தான். நடராஜருக்கு நடைபெறும் ஆனி திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாகவும் தம்பதிகளுக்கு சுகமான வாழ்வும் கிடைப்பதாகவும், கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்றும் ஆண்களுக்கு மனதில் தைரியமும், உடல் பலமும், வளமும் கூடும் என்றும் கருதப்படுகிறது.
பதஞ்சலி மகரிஷி:
சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சன விழா, பத்து நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டாண்டு காலமாக, ஆனியில் நடைபெறும் திருமஞ்சனத் திருவிழாவைத் துவக்கி வைத்தவர் யார் தெரியுமா. யோக சூத்திரத்தை நமக்கு அருளிய பதஞ்சலி மகரிஷி.
சிதம்பரம் ஆனி திருமஞ்சனம்:
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நிகழும் ஆனி திருமஞ்சனம் நிகழ்வைக் காண இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
முக்கிய விழாவான தேரோட்டம் இன்று 11ஆம் தேதியும், 12ஆம் தேதி ஆனி திருமஞ்சன தரிசன விழாவும் நடைபெற உள்ளன. தேரோட்டம் மற்றும் திருமஞ்சன தரிசன விழாவை காண சிதம்பரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளதால் நகரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது.
நடராஜர் சிவகாமி தரிசனம்:
ஆனி திருமஞ்சனம் முடிந்து நாளைய தினம் ஸ்ரீநடராஜரையும், அன்னை ஸ்ரீசிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்வார்கள். அங்கே அவருக்கு திருமஞ்சனம் எனப்படும் அபிஷேகங்கள் நடைபெறும். பிறகு இருவரும் ஆனந்த நடனம் புரியும் அற்புத காட்சியைத் தரிசிப்பார்கள் பக்தர்கள். ஆனந்த நடனம் ஆடியபடியே, சித்சபையில் எழுந்தருளுவதைக் காணக் கண்கோடி வேண்டும்!