அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் அல்லது வேலை உயர்ந்த சொத்துக்கள், பொருட்கள், மங்கள பொருட்கள் வாங்க வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய வழக்கமாக உள்ளது. உண்மையில் அட்சய திருதியை அன்று என்ன வாங்க வேண்டும்? என்ன செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அட்சய திருதியை என்றதும் அனைவருக்கும் மனதில் தோன்றுவது தங்கம் வாங்க வேண்டும் என்பது தான். தங்கம், வெள்ளி, பட்டு, புதிய வாகனம், கல் உப்பு, மல்லிக்கைப்பூ இவற்றில் எதை வாங்க வேண்டும்? எதை வாங்கினால் குறையாமல் வீட்டில் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும்? என்பது தான் பெரும்பாலானவர்களின் கேள்வியாக உள்ளது. ஆனால் உண்மையில் அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்? இந்த நாளில் என்ன செய்தால் மகாலட்சுமியின் அருளால் செல்வ வளம் பெருகும் என சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அட்சய திருதியை 2026 :

2026ம் ஆண்டில் அட்சய திருதியை ஏப்ரல் 20ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. இரண்டு நாட்கள் திருதியை திதி வருவதால் பலரும் ஏப்ரல் 19ம் தேதியை தான் அட்சய திருதியை நாளாக கருதி வழிபாடுகள், புதிய பொருட்கள் வாங்குவதை செய்துள்ளனர்.திருதியை திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வரும் நாள் தான் அட்சய திருதியை. இதுவே பெருக்கத்திற்குரிய நாளாகும். ஏப்ரல் 19ம் தேதியன்று திருதியை திதி துவங்கி இருந்தாலும் அன்று திருதியை திதியும், கார்த்திகை நட்சத்திரமும் இணைந்து தான் உள்ளன. இது முருக வழிபாட்டிற்குரிய மிக முக்கியமான விரத நாளாகும். ஆனால் அட்சய திருதியை வழிபாடுகள் செய்ய ஏற்ற நாள் ஏப்ரல் 20 மட்டுமே.

அட்சய திருதியை நாளின் சிறப்புகள் :

- பிரம்ம தேவர் உலகத்தை படைக்க துவங்கிய நாளாக கருதப்படுகிறது. - ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி மற்றும் அன்னபூரணி அவதரித்த நாள். - ஸ்ரீராமர் தோன்றிய சூரிய குலத்தில் பிறந்த பகீரதன் என்ற மன்னன் தன்னுடைய முன்னோர்களின் பாவங்களை போக்க நல ஆண்டுகள் கடும் தவம் இருந்து, கங்கை நதியை பூமிக்கு கொண்டு வந்த நாள். - பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது சூரிய பகவான், அட்சய பாத்திரத்தை வரமாக வழங்கி நாள். - மகாவிஷ்ணுவின் 6வது அவதாரமான பரசுராமர் அவதரித்த நாள். - கண்ணனின் அன்பு மட்டும் போதும் என நினைத்து ஒரு பிடி அவலை பரிசாக கொடுத்த குசேலரை பெரும் செல்வந்தராக மாற்றி பகவான் கிருஷ்ணர் அருள் புரிந்த நாள். - பிரம்மனின் சாபத்தால் கையில் பிச்சை பாத்திரம் ஏந்தி யாசகம் பெற்ற சிவபெருமானுக்கு, உணவு அளித்து, அவரின் சாபத்தை அன்னபூரணி தேவி போக்கிய நாள் இந்த நாள் தான். - யாசகம் கேட்டு வந்தருக்கு இல்லை என சொல்லாமல் தன்னிடம் இருந்த ஒரு நெல்லிக்கனியை தானமாக அளித்த பெண்ணிற்காக, மகாலட்சுமியை வேண்டி, கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, ஸ்ரீ ஆதிசங்கரர் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்த நாள் இது தான்.

அட்சய திருதியை புதிய பொருட்கள் வாங்குவதற்கான நாளா?

அட்சய திருதியை என்றதும் புதிய பொருட்களை வீட்டிற்கு வாங்கி சேர்க்க வேண்டும். அப்படி வாங்கினால் தான் அந்த பொருள் மேலும் மேலும் சேர்ந்து கொண்டே இருக்கும். மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் புராணங்களின் கூறும் நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தால், அட்சய திருதியை கொடுப்பதற்குரிய நாளே தவிர, வாங்குவதற்கான நாள் கிடையாது. தானங்கள் கொடுத்து, அதன் மூலம் புண்ணியங்களை அதிகம் பெருக செய்ய வேண்டிய நாள் தான் அட்சய திருதியை நாள் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.

இல்லாதவர்களுக்கு தானம் அளிக்கும் போது, அவர்களின் மனம் மகிழும் போது நம்முடைய பாவங்களில் ஒரு பகுதி குறையும். இதனால் அதுவரை நமக்கு தெய்வத்தின் அருள் கிடைப்பதற்கு தடையாக இருந்த பாவங்கள் குறைவதால், இறைவனின் அருள் கிடைக்கும். இதனால் நமக்கு புண்ணிய பலன்களும், தெய்வ அருளும் பெருகும். அப்படி பெருகும் போது, நம்முடைய வாழ்க்கையில் 16 வகையான செல்வங்களும் பெருகும் என்பதே அட்சய திருதியை பற்றி சாஸ்திரங்களும், புராணங்களும் சொல்லுவதாகும். இந்நாளில் தங்கம் வாங்குவது, தானம் செய்வது மற்றும் புதிய சுப காரியங்களைத் தொடங்குவது செல்வத்தையும், புண்ணியத்தையும் பன்மடங்கு பெருக்கி நிலைத்து நிற்கச் செய்யும் என்பது சாஸ்திர நம்பிக்கை. அட்சய திருதியையின் மகத்துவம் பற்றி பவிஷ்யோத்தர புராணம் விரிவாக விளக்குகிறது.