தங்கம் விலை தாறுமாறாக விற்கிறது. அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க முடியவில்லை என கவலைப்படுறீங்களா? தங்கம் வாங்காமலேயே, தங்கம் வாங்கியதற்கு இணையான பலனை பெறுவதற்கு வழி உள்ளது. சில குறிப்பிட்ட பொருட்களை வாங்கினால் அதிர்ஷ்டம் தேடி வரும்.
அட்சய திருதியை என்றாலே உடனடியாக தங்கம் வாங்க வேண்டும் என்று தான் அனைவருக்கும் தோன்றும். தங்க நகையாக வாங்க முடியவில்லை என்றாலும் தங்கம், வெள்ளி காசுகள் மட்டுமாவது வாங்கி விட வேண்டும். அப்படி வாங்கினால் தான் வீட்டில் அதிர்ஷ்டமும், செல்வமும் பெருகும் என பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்று தங்கம் விற்கும் விலைக்கு ஒரு கிராம் தங்கம் வாங்குவதற்கே செய்கூலி, சேதாரம் என ரூ.15,000 க்கும் மேல் செலவிட வேண்டி இருக்கும். இதில் அட்சய திருதியைக்கு எப்படி தங்கம் வாங்குவது என கவலைப்படுகிறீர்களா?
கவலையை விடுங்க. அட்சய திருதியை அன்று தங்கம், வெள்ளி, நகை என காஸ்ட்லியாக எதுவும் வாங்க வேண்டாம். மகாலட்சுமிக்கு விருப்பமான குறிப்பிட்ட 5 பொருட்களை வாங்கினாலே போதும், மகாலட்சுமி மனம் மகிழ்ந்து உங்கள் வீட்டில் செல்வமும், அதிர்ஷ்டமும் எப்பவும் குறையாமல் பெருகிக் கொண்டே இருக்க செய்து விடுவாள். இந்த 5 பொருட்களும் மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் மிக புனிதமான பொருட்கள். இவை ஐந்தையும் வாங்க முடியாவிட்டாலும், ஏதாவது ஒன்று, இரண்டையாவது வீட்டில் வாங்க வைத்து பாருங்கள். நடக்கும் மாற்றத்தை கண்டு நீங்களே அதிசயப்படுவீங்க.
அட்சய திருதியையில் வாங்க வேண்டிய அதிர்ஷ்டம் தரும் 5 பொருட்கள் :
1. மண் பானை :

அட்சய திருதியை அன்று புதிய மண்பானை வாங்கி அதில் தண்ணீர் நிரப்பி, வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம். அல்லது இதை யாருக்காவது தானம் கொடுக்கலாம். மண் பானை என்பது பூமா தேவியின் அம்சம். இதை தானமாக கொடுப்பதால் பூமி தானம் கொடுத்த புண்ணிய பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் கிடைக்கும். நம்முடைய கர்ம வினைகள் குறையும். ஒரு போதும் காலியான மண் பானையை வீட்டிற்குள் கொண்டு வந்து வைக்கக் கூடாது. அதை நிறை குடமாக தண்ணீர் நிரப்பி, கொண்டு வந்து வைப்பது செழிப்பை தரும்.
2. வலம்புரி சங்கு :
மகாலட்சுமி விரும்பி வாசம் செய்யும் பொருட்களில் ஒன்று சங்கு. அதிலும் வலம்புரி சங்கு இந்து மதத்தில் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. பாற்கடலில் மகாலட்சுமியுடன் தோன்றிய அதிர்ஷ்டம் தரும் பொருட்களில் ஒன்று வலம்புரி சங்கு. இதை வீட்டில் வாங்கி வைப்பதால் வீட்டில் இருக்கும் வறுமை, வாஸ்து பிரச்சனைகள் ஆகியவை சரியாகும். மகாலட்சுமியின் அருளுடன் குபேரனின் அருளும் குறையாமல் கிடைக்கும்.
3. ஸ்ரீ யந்திரம் :

ஸ்ரீ யந்திரம், மகாலட்சுமியின் அருட்சக்தி நிறைந்த யந்திரமாகும். இதை வாங்கி வீட்டில் வைத்தால் அளவற்ற செல்வத்தை தேடி வர வைக்கும். மகாலட்சுமிக்கு உரிய மிகவும் மங்களகரமான பொருட்களில் இதுவும் ஒன்றாகும். இதை மகாலட்சுமிக்கு உரிய பீஜ மந்திரங்களை சொல்லி, முறையாக வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால், வறுமை, பொருளாதார பிரச்சனை என்பது வீட்டில் எப்போதும் ஏற்படாது. பணப் பிரச்சனையை தீர்ப்பதுடன், மன அமைதியையும் தரும்.
4. சோழி :
வெள்ளை நிற சோழிகளை வீட்டில் வாங்கி வைக்கலாம். 11 அல்லது 21 என்ற எண்ணிக்கையில் வாங்கி வைக்கலாம். இந்த சோழிகளை மகாலட்சுமியின் பாதத்தில் வைத்து வழிபட்ட பிறகு, வீட்டில் பணப் பெட்டி வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இதனால் பொருளாதாரத்தில் முன்னேற்ற ஏற்படும். இது அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கும் பொருளாகவும் கருதப்படுகிறது. சோழி, சிற்பிகள் தோன்றும் கடல், மகாலட்சுமியின் தாய்வீடாக சொல்லப்படுவதால் கடலில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்ததாக கருதப்படுகின்றன.
5. பார்லி :
பண்டை காலம் தொட்டு நம்முடைய கலாச்சாரத்தில் தங்கத்திற்கு இணையான பொருளாக கருதப்படுவது பார்லி. அட்சய திருதியை அன்று பார்லி வாங்குவது தங்கம் வாங்குவதற்கு சமம். இதை பூஜை செய்த பிறகு உணவாக சமைத்து சாப்பிடலாம். அல்லது ஒரு மஞ்சள் துணியில் கட்டி, அதை வீட்டில் பணம் வைக்கும் இடத்திலோ அல்லது வீட்டின் நிலை வாசலிலோ கட்டி விடலாம். இதனால் வீட்டில் செல்வத்தை காந்தம் போல் ஈர்த்துக் கொண்டே இருக்கும். பணத்திற்கு குறை, தட்டுப்பாடு என்று எதுவும் இருக்காது. பார்லியை தானமாகவும் கொடுக்கலாம். இது அன்னதானம் செய்த புண்ணியத்தை தரும்.


