அட்சய திருதியை நாளை எப்படி கொண்டாட வேண்டும், எந்த நாளில் கொண்டாட வேண்டும்,தங்கத்திற்கு பதில் வேறு என்னென்ன பொருட்கள் வாங்கலாம் என்பது போன்ற பல கேள்விகளும், சந்தேகங்களும் பலருக்கும் உண்டு. 2026 ம் ஆண்டில் அட்சய திருதியை எப்போது வருகிறது, எந்த நாளில் மங்கள பொருட்கள் வாங்கினால் செல்வம் பெருகும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அட்சய திருதியை என்பது பெருக்கத்திற்கான நாளாக கருதப்படுகிறது. 'அட்சயம்' என்றால் முடிவில்லாத, அள்ள அள்ள குறையாத என்று பொருள். ஆன்மீக ரீதியாக பல சிறப்புக்களை கொண்ட நாளாக அட்சய திருதியை கருதப்படுகிறது. இந்த நாளில் எதை செய்தாலும் அத பெருகிக் கொண்டே போகும் என்பது பழங்காலம் முதலே இருந்து வரும் நம்பிக்கையாகும். அதனால் தான் அட்சய திருதியை அன்று தங்கம், வெள்ளி, நகைகள் போன்ற விலை உயர்ந்த பொருட்கள், ஆபரணங்கள் ஆகியவற்றை வாங்குவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அட்சய திருதியை சிறப்புகள் :

- புராணக்கதைகளின் படி, மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது அவர்களின் பசியை போக்குவதற்காக, திரெளபதி வேண்டிக் கொண்டதால், சூரிய பகவான் அட்சய பாத்திரத்தை அருளிய தினம் இந்த அட்சய திருதியை தான். - வறுமையில் வாடி போதும், தன்னிடம் யாசகம் கேட்டு வந்தவருக்கு இல்லை என சொல்லி விடக் கூடாது என்பதற்காக தன்னிடம் இருந்த நெல்லிக்கனியை தந்த பெண்ணிற்காக, அவளின் வறுமையை போக்க, ஸ்ரீஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனியை மழையாக பெய்ய வைத்த தினமும் இது தான். - பாற்கடலை கடைந்த போது செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியும், கேட்டதை தரும் காமதேனு பசுவும் தோன்றிய நன்னாளும் இது தான். - குபேரனை சிவபெருமானின் அருளால் செல்வங்களை நிர்வகிக்கும் பொறுப்பை பெற்றதும் இந்த நாளில் தான். - மகாபாரத காவியத்தை வேத வியாசர் சொல்ல, விநாயகப் பெருமான் எழுத துவங்கிய நாளும் அட்சய திருதியை தான். - திரேதா யுகத்தின் தொடக்க நாளாக அட்சய திருதியை கருதப்படுகிறது. - சிவபெருமான் பிட்சாடனராக சென்று அன்னபூரணியிடம் யாசகம் பெற்று, தனது சாபம் நீங்கப் பெற்ற நாளும் இது தான்.

அட்சய திருதி அன்று வாங்க வேண்டியவை :

அட்சய திருதியை அன்று தங்கம், வெள்ளி வாங்கினால் தான் அது பெருகும் என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலைக்கு அனைவராலும் தங்கம் வாங்க முடியாது. அது மட்டுமல்ல அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. அதே சமயம், தங்கம் வாங்க முடியாதவர்கள் தங்கத்திற்கு இணையான பலன் தரும் மங்கள பொருட்களான அரிசி, கடுகு, சமையல் பாத்திரங்கள், மல்லிகைப்பூ, கல் உப்பு, மண் பானை, மண் அகல் விளக்கு, நெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வீட்டில் வாங்கி வைத்து வழிபடலாம். அதே போல் பார்லி அரிசி வாங்கி வைத்து வழிபடுவதும், அதை தானம் செய்வதும் மகாலட்சுமியின் மனதை மகிழ்வித்து, வீட்டில் எப்போதும் குறையாத செல்வம் பெருக செய்யும்.

அட்சய திருதி 2026 தேதி என்ன?

அட்சய திருதியை ஏப்ரல் 19ம் தேதி என சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காலண்டரில் ஏப்ரல் 20ம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 2006ம் ஆண்டில் அட்சய திருதியை எந்த தேதியில் வருகிறது. எதை அட்சய திருதியை நாளாக கணக்கில் எடுத்துக் கொண்டு தங்கம் வாங்குவது, செல்வம் பெருக மகாலட்சுமி வழிபாடு செய்வது என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வளர்பிறையில் வரும் திருதியை திதியையே அட்சய திருதியை நாளாக கொண்டாடுகிறோம்.

ஆனால் இந்த ஆண்டு திருதியை திதி, ஏப்ரல் 19ம் தேதி பகல் 01.32 மணிக்கு பிறகு துவங்கி, ஏப்ரல் 20ம் தேதி காலை 11.12 மணிக்கு நிறைவடைகிறது. இரண்ட நாட்களும் திருதியை திதி அமைந்திருப்பதால் தான் எந்த நாளை அட்சய திருதியை எடுத்துக் கொள்வது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அட்சய திருதி என்பது வெறும் திருதியை திதியை வைத்து மட்டும் கொண்டாடப்படுவது கிடையாது. ஆன்மீக வல்லுநர்களின் கூற்றுப்படி, திருதியை திதியும், ரோகிணி நட்சத்திரம் சேரும் நாள் தான் அட்சய திருதியை. இதுவே பெருக்கத்தை தரக் கூடிய நாள் என சொல்லப்படுகிறது. அப்படி பார்த்தால் ஏப்ரல் 20ம் தேதியன்று காலை 07.53 மணிக்கு தான் ரோகிணி நட்சத்திரம் துவங்குகிறது. அதற்கு முன்பு வரை கிருத்திகை நட்சத்திரமே உள்ளது.

வீட்டில் செல்வம் பெருக வேண்டும், மகாலட்சுமியின் அருளால் குறையாத செல்வம் சேர வேண்டும் என நினைப்பவர்கள் ஏப்ரல் 20ம் தேதியன்று மங்கள பொருட்கள் வாங்கலாம். புதிய வாகனம், புதிய முதலீடு, தொழில் துவங்குவது போன்றவற்றையும் செய்யலாம். அன்றைய தினம் விநாயகருக்குரிய வளர்பிறை சதுர்த்தியும் வருவது மிகவும் சிறப்புக்குரியதாகும். எந்த தடையும் இல்லாமல் வெற்றி கிடைக்க, செல்வ வளம் பெருக, ஞானம் பெருக முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வழிபட்டு விட்டு அட்சய திருதியை நாளில் சுப நிகழ்வுகளை துவங்கலாம்.