Yaathisai Review : சோழர்களைப் போல் பிரம்மிக்க வைத்தார்களா பாண்டியர்கள்? - யாத்திசை படத்தின் விமர்சனம் இதோ
தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் ரணதீரன் என்கிற பாண்டிய மன்னனின் வரலாற்றை பேசும் படமாக வெளியாகி இருக்கும் யாத்திசை திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் வரலாற்று படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் சமீப காலமாக அதிகளவில் வரலாற்றுப் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அப்படி எடுக்கப்பட்ட ஆர்.ஆர்.ஆர், பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றன. இதுவரை வெளியான வரலாற்றுப் படங்கள் எல்லாம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டவை. ஆனால் அவற்றுக்கெல்லாம் சவால் விடும் வகையில் கம்மியான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் யாத்திசை.
பொதுவாக வரலாற்று படம் என்றாலே குறைந்தது ரூ.100 கோடி பட்ஜெட்டில் தான் எடுப்பார்கள். ஆனால் யாத்திசை படத்தை வெறும் ரூ.10 கோடி பட்ஜெட்டில் எடுத்து பிரம்மிக்க வைத்துள்ளார் இயக்குனர் தரணி ராஜேந்திரன். இதில் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் அவர் இயக்கும் முதல் படமும் இதுதான். முதல் படத்திலேயே இப்படி ஒரு வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தை தேர்வு செய்து ரிலீசுக்கு முன்பே அதில் பாதி வெற்றியை ருசித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
ரிலீசுக்கு முன் அப்படக்குழு வெளியிட்ட டிரைலர், டீசர் முதல் ஸ்னீக் பீக் வீடியோ வரை அனைத்துமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த வண்ணம் இருந்தன. பாண்டிய மன்னனான ரணதீரனுக்கும், எயினர்களுக்கும் இடையேயான போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் தான் யாத்திசை. பெரும்பாலும் புதுமுகங்களே அதிகம் பணியாற்றியுள்ள இப்படம் இன்று ரிலீஸாகி உள்ளது. ஒரு பக்கம் பொன்னியின் செல்வன் 2 ரிலீசுக்காக காத்திருக்கும் வேளையில் நீங்கள் சோழர்கள் கதையோடு வந்தால், அதற்கு போட்டியாக நாங்கள் பாண்டியர்கள் கதையுடன் களமிறங்குவோம் என போட்டிபோட்டு ரிலீசாகி உள்ள யாத்திசை திரைப்படம் எப்படி இருக்கிறது என படம் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... 40 வயசுல யூத் ஐகான் விருது... சத்தியமா இத நான் எதிர்பார்க்கவே இல்லை - தனுஷ் ஓபன் டாக்
படம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “7 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை. நன்கு ஆராயப்பட்ட, சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள ஒரு சரித்திர படம் இது. குறிப்பாக இரண்டாம் பாதி உங்களை மிகவும் கவரும். தொழில்நுட்பரீதியாக சிறந்து விளங்கும், இந்த திரைப்படம் உங்கள் நேரத்திற்கும் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கும் ஒர்த்தானது. வெறும் 2 மணிநேர படம் தான். அதில் வரும் சிறப்பான ஆக்ஷன் மற்றும் போர் காட்சிகள் ஆகியவை படத்திற்கு பெரிய பிளஸ். புதிய நடிகர் பட்டாளத்தை வைத்து இப்படி ஒரு படத்தைத் தயாரித்த குழுவினருக்கு பாராட்டுகள்” என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில், ‘யாத்திசை படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். படம் வெறித்தனமாக இருக்கிறது. இப்படி ஒரு படத்தை கொடுத்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் பாராட்டுக்கள்” என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், “யாத்திசை - சம்பவம் என குறிப்பிட்டு பேசாம பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தை தள்ளிவைத்து விடுவது நல்லது என பதிவிட்டு படம் வேறலெவலில் இருப்பதாக பாராட்டி உள்ளார்.
மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும் போது யாத்திசை திரைப்படம் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்திற்கு கிடைக்கும் பாசிடிவ் விமர்சனங்களால், அடுத்தடுத்த ஷோக்களுக்கான கூட்டமும் அதிகரித்து வருவதாக திரையரங்க உரிமையாளர்களும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ரஜினிக்கு பயம்காட்டிய ஆக்ஸ்ட் செண்டிமெண்ட்... அதிரடியாக ஜெயிலர் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதன் பின்னணி இதுதானா..!