அய்யப்ப பக்தருக்கு அடித்த ஜாக்பாட்! சபரிமலை சென்றவருக்கு புத்தாண்டு லாட்டரியில் ரூ.20 கோடி பரிசு!
ஐயப்பனை தரிசிக்கச் சென்று அதிர்ஷ்டசாலியான இவருக்கு ரூ.20 கோடி பரிசுத் தொகையில், வரிகள் நீங்கலாக ரூ.12.60 கோடி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
புதுச்சேரியில் இருந்து சபரிமலை சென்ற ஐயப்ப பக்தர் கேரளாவில் வாங்கிய புத்தாண்டு பம்பர் குலுக்கல் லாட்டரியில் அவருக்கு ரூ.20 கோடி பரிசு கிடைத்துள்ளது.
கேரள அரசின் லாட்டரி துறை சார்பில் கிறிஸ்துமஸ் - புத்தாண்டு பம்பர் லாட்டரி குலுக்கல் ஜனவரி 24ஆம் தேதி நடைபெற்றது. ரூ.400 விலையுள்ள அந்த லாட்டரி 45 லட்சம் சீட்டுகள் விற்பனையாகி இருந்தது. இந்நிலையில் இந்த பம்பர் குலுக்கலில் முதல் பரிசான ரூ.20 கோடி X C 224091 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்குக் கிடைத்தது.
இந்த எண் கொண்ட லாட்டரி சீட்டு பாலக்காட்டைச் சேர்ந்த மொத்த விற்பனையாளரிடம் இருந்து வாங்கி திருவனந்தபுரத்தில் லாட்டரி கடை வைத்துள்ளவரிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த லாட்டரியை வாங்கிய அதிர்ஷ்டசாலி ஒரு தமிழர் என்று தெரியவந்துள்ளது.
பிரான்சில் UPI பேமெண்ட்! ஈபிள் டவரைப் பார்க்க ரூபாயில் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கலாம்!
புதுச்சேரியை சேர்ந்த 33 வயதான பக்தர் சபரிமலைக்கு வந்து அய்யப்பனை தரிசனம் செய்துவிட்டு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து லாட்டரி கடையில் புத்தாண்டு பம்பர் குலுக்கல் லாட்டரியை வாங்கியுள்ளார். லாட்டரியை வென்றதாக தனது பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரின் கோரிக்கையை ஏற்று கேரள லாட்டரி இயக்குநரகமும் அவரது பெயரை வெளியிடவில்லை.
லாட்டரி வென்ற தமிழர் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் நண்பர்களுடன் லாட்டரி இயக்குநரகத்திற்குச் சென்றுள்ளார். தன்னிடமுள்ள லாட்டரி சீட்டை ஒப்படைத்து சான்றிதழ் பெற்றுக்கொண்டார். ஐயப்பனை தரிசிக்கச் சென்று அதிர்ஷ்டசாலியான இவருக்கு ரூ.20 கோடி பரிசுத் தொகையில், வரிகள் நீங்கலாக ரூ.12.60 கோடி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.