புதுச்சேரியில் வெளிநாட்டினரை கடத்தி விற்பனை; ஒருவர் கைது - என்ஐஏ அதிகாரிகள் அதிரடி!!
புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் வெளிநாட்டு நபர்களை கடத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டில், புதுச்சேரி எல்லை பிள்ளை சாவடி பகுதியில் கொல்கத்தாவைச் சேர்ந்த வாலிபரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
வடகிழக்கு மாநிலங்களான மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் பங்களாதேஷ், மியான்மர் நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோதகமாக நுழைவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இப்படி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை கடத்தி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமைகளாக ஒரு கும்பல் விற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அசாம் மாநிலத்தில் இதுதொடர்பாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் வெளிநாட்டினரை கடத்தி விற்பதில் ஏஜெண்டுகள் பங்கு வகித்து வந்ததாக கூறப்பட்டது.
இந்த ஏஜெண்டுகளின் பட்டியல் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் சிக்கியது. இதன் பேரில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் சந்தேகத்துக்கு இடமான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னையில் பள்ளிக்கரணை, மறைமலைநகர், படப்பை உட்பட பல பகுதிகளில் சோதனை நடந்தது.
கோவையில் கொட்டித்தீர்த்த மழை; சாலை எது? மழை நீர் எது? என தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவஸ்தை!!
புதுச்சேரியில் எல்லை பிள்ளை சாவடி 100 அடி சாலையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரே ஆசிரமத்துக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இங்கு காம்பவுண்டு சுவரையொட்டி பழைய பொருட்கள் போட்டு வைத்திருக்கும் கிடங்கு உள்ளது. இதன் மாடியில் என்ஐஏ அதிகாரிகள் 5 பேர் உள்ளூர் காவல்துறையினர் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அப்போது, அங்கு தங்கியிருந்த மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த எஸ்.கே.பாபுவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பாபுவிடம் இருந்து ஐபோன், ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் அவரை கைது செய்து கோரிமேட்டில் உள்ள என்ஐஏ அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். வெளிநாட்டிலிருந்து நபர்களை கடத்தி வந்து புதுச்சேரி உட்பட வெளிமாநிலங்களில் கொத்தடிமைகளாக விற்பனை செய்தாரா? எத்தனை பேரை அழைத்து வந்தார்? எங்கு விற்றார்? வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் இவர்களுக்கு தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொல்கத்தாவில் செய்த குற்றத்திற்காக பாபுவை கைது செய்து இருப்பதாக உள்ளூர் போலீசாரிடம் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் கட்டிடட வேலையில் பாபு ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் அவர் வைத்திருந்த ஆதார் எண்ணை உள்ளூர் காவல்துறையினர் சோதனையிட்டதில் எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. இதனால் அவரது பெயர், ஆதார் எண் என அனைத்தும் போலியாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.