ரௌடிகளின் கொட்டத்தை அடக்க விரைவில் எண்கவுண்ட்டர் - அமைச்சர் பரபரப்பு தகவல்
புதுச்சேரியில் ரௌடிகளின் அட்டூழியத்தைக் கட்டுப்படுத்த எண்கவுண்ட்டர் செய்வது குறித்து விரைவில் ஆலோசானை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் நமசிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நிதி பற்றாக்குறை காரணமாக இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சராக மீண்டும் ரங்கசாமி வந்த பிறகு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மிதிவண்டி மீண்டும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்கள் 11 ஆயிரத்து 925 மாணவர்களுக்கு சுமார் 5 கோடி ரூபாய் செலவில் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
தந்தையைின் சடலத்திடம் ஆசி பெற்று தேர்வு எழுதச்சென்ற மாணவன்; திண்டுக்கலில் நிகழ்ந்த சோகம்
சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி 30 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் தொடர் குற்றச் செயலில் ஈடுபடும் ரௌடிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
புதுச்சேரியில் கஞ்சா விற்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இது மேலும் தொடரும் என்று குறிப்பிட்ட அவர், ரௌடிகளுடன் சேர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் ரௌடிகளை ஒடுக்க என்கவுண்டர் செய்வது குறித்து விரைவில் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.