ஆர்டரின் பெயரில் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்; பேனர் வைத்து கள் விற்ற வியாபாரி
புகார் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து சாலையில் பேனர் வைத்து கள் விற்ற வியாபாரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை செந்தாமரை நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் புதுச்சேரி கருவடி குப்பத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவரின் இடத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளுக் கடை நடத்தி வருகிறார். அந்த இடத்திற்காக சக்திவேல் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் அவர் நடத்தி வரும் கள்ளுக்கடைக்கு புதுச்சேரி கலால் துறைக்கு கிஸ்தி எனப்படும் கலால் வரியாக ஆண்டிற்கு இரண்டு லட்சத்து 40 ஆயிரம் செலுத்துவதாகவும் கூறப்படுகிறது. கள்ளுக்கடையில் அதிக அளவில் மரங்கள் உள்ளது இதனால் கள்ளு குடிக்க வரும் குடிமகன்கள் அந்த மரத்தின் அடியில் அமர்ந்து தான் கள்ளு குடித்துவிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் இடத்தின் உரிமையாளர் ஜானகிராமன் திடீரென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி உள்ளார்.
சேலத்தில் மின்கம்பி அறுந்து விழுந்து கட்டிடத் தொழிலாளி உயிரிழப்பு
இது குறித்து சக்திவேல் தான் ஒரு லட்சத்து 10 ஆயிரம் அந்த மரத்திற்கு சேர்த்துதான் வாடகை கொடுப்பதாக கூறி இடத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலால் துறையிடம் புகார் அளித்தார். ஆனால் இந்த புகாரின் மீது கலால் துறை இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் அவர் கலால் துறை அதிகாரிகளை கண்டித்து தனது கள்ளுக் கடையை சாலையில் வைத்து வியாபாரம் செய்து தனது எதிர்ப்பை நூதன முறையில் தெரிவித்தார்.
மேலும் 4-கேண்களில் அடங்கிய கள்ளை சாலையில் வைத்து கள்ளு குடிக்க வரும் குடிமகன்களுக்கு ஊற்றி கொடுத்து வியாபார செய்தார். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கள்ளுக்கடையின் உரிமையாளர் சக்திவேல் கூறும்போது, எனது புகார் மீது கலால் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் தனது கடையை சாலையில் வைத்து நடத்தி தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறேன். மேலும் மதுபான கடைகளுக்கு வழங்குவது போல் நிரந்தரமாக கள்ளு கடைகளுக்கும் உரிமம் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.