அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்; தமிழகத்தை தொடர்ந்து புதுவையில் அமல்
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியில் அரசுப் பேருந்துகளில் அனைத்து மகளிருக்கும் இலவசப் பயணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நிதிநிலை அறிக்கை மீதான சட்டமன்ற உறுப்பினர்களின் உரை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து மாநில முதல்வர் ரங்கசாமி உரையாற்றினார். தற்போது வரை புதுவை அரசுப் பேருந்துகளில் ஆதிதிராவிடர் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் இனி அனைத்து பெண்களுக்கும் செயல்படுத்தப்படும்.
அதன்படி புதுவையில் உள்ள அரசுப் பேருந்துகளில் அனைத்து மகளிருக்கும் இலவசப் பயணம் வழங்கப்படும். மாநிலத்தில் தற்போது விதவைப் பெண்களுக்கு மாதம் தோறும் 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அத்திட்டத்தில் கூடுதலாக ஆயிரம் ரூபாய் சேர்த்து இனி மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மூடப்பட்டுள்ள அரசு சர்க்கரை ஆலைகளை தனியார் உதவியுடன் இணைந்து மீண்டும் திறந்து அதனை செயல்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்புகளுக்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மேசையில் தட்டி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.