ஆழ்கடலில் கிரிக்கெட் விளையாடி சென்னை அணிக்கு வாழ்த்து தெரிவித்த இளைஞர்கள்
புதுச்சேரியில் 60 அடி ஆழ்கடலில் கிரிக்கெட் விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆழ் கடல் நீச்சல் வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், குஜராத் அணிக்கும் இறுதிப் போட்டி நேற்று நடந்து முடிந்தது. அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. இறுதி போட்டியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் கண்டு ரசித்தாலும் உலகம் முழுவதும் பல்வேறு இடத்திலிருந்து ரசிகர்கள் தொலைக்காட்சியிலும் கண்டு ரசித்தனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்து கூறும் வகையில் ஸ்கூபா ஆழ் கடல் நீச்சல் பயிற்சி பள்ளியை சேர்ந்த ஆழ் கடல் நீச்சல் வீரர்கள் அரவிந்தன் தலைமையில் புதுச்சேரி மற்றும் நீலாங்கரைக்கு இடையில் உள்ள 60-அடி ஆழ்கடல் பகுதியில் கிரிக்கெட் விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கியூபா எனப்படும் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பள்ளி நடத்தி வரும் அரவிந்தன் அவ்வப்போது ட்ரெண்டிங்கில் உள்ள நிகழ்வுகளை ஆழ்கடலில் சென்று தனது நீச்சல் வீரர்களுடன் நிகழ்த்தி காட்டி அதை வீடியோவாக வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.