புதுச்சேரி விடுதலை தின விழாவில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மாநில அந்தஸ்து கோரி முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு!!
கொட்டும் மழையிலும் புதுச்சேரி கடற்கரை சாலையில் கோலாகலமாக நடைபெற்ற புதுச்சேரி விடுதலை தின விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பிரஞ்சு ஆதிக்கத்தின் கீழ் புதுச்சேரி 180 ஆண்டுகள் இருந்தது. இந்தியாவுடன் புதுச்சேரி இணைய வேண்டும் என்று கீழூரில் நடந்த வாக்கெடுப்பில் அப்போது இருந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் 178 பேரில் 170 பேர் இணைய வேண்டும் என வாக்களித்தனர். 1954ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி, பிரஞ்சு அரசு புதுச்சேரிக்கு விடுதலையளித்தது. இந்நாளை புதுச்சேரியின் விடுதலை நாளாக புதுச்சேரி அரசு கொண்டாடி வருகிறது.
அந்த வகையில் இன்று விடுதலை தினவிழா மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். கொட்டும் மழையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அணிவகுத்து வந்த காவல் துறையினரின் பல்வேறு படைப்பிரிவினர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து கொட்டும் மழையிலே பல்வேறு மாநில கலைஞர்களின் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமை செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்ட அரசு மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.