சென்னை டூ புதுச்சேரி 'பீர் பஸ்' சுற்றுலா! கோடையைக் கொண்டாட புது ரூட்!
சென்னையில் இருந்து புதுச்சேரிக்குச் சென்றுவரும் பீர் பஸ் பேருந்தில் 3000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இந்தப் பேருந்தைத் தனியார் நிறுவனம் இயக்குகிறது.
மது அருந்துவோரைக் கவரும் வகையில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு பீர் பஸ் எனப்படும் பிரத்யேகமான பேருந்து வரும் 22ஆம் தேதி இயக்கப்ப உள்ளது. சுற்றுலா என்ற பெயரில் அறிமுகமாகும் இந்தப் பேருந்து சேவை குடிகார ஆசாமிகளுக்குக் கொண்டாட்டமாக அமைய உள்ளது.
புதுச்சேரியில் எங்கு பார்த்தாலும் பல மதுபானக் கடைகள் காணக் கிடைக்கின்றன. இதன் அடுத்த கட்டமாக ரெஸ்ட்டாரண்டுகள் மற்றும் பாரம்பரிய வீடுகளிலும் சுற்றுலாவைக் காரணம் காட்டி ரெஸ்டோ பார்கள் திறக்க புதுச்சேரி அரசு அனுமதி அளிக்கிறது. இந்நிலையில், இப்போது, மதுபோதை ஆசாமிகளுக்கு மகிழ்ச்சி கொடுக்க சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு தனி பஸ் இயக்கப்பட உள்ளது.
வரும் 22ஆம் தேதி முதல் 'பீர் பஸ்' என்ற பெயரில் சென்னை - புதுச்சேரி இடையே பேருந்து இயக்கப்படுகிறது. 'பிரே அவுஸ் டூர்' என்ற பெயரில் கட்டமரான் பிரேவிங் கோ-பாண்டி என்ற தனியார் நிறுவனம் இந்தப் பேருந்தை இயக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தப் பேருந்தில் ரூ.3,000 வீதம் கட்டணம் செலுத்தி புதுச்சேரியை சுற்றிப் பார்த்துவிட்டு அன்றே சென்னை திரும்பலாம்.
பீர் பஸ் என்று அழைப்பதால்,பஸ்சில் குடிப்பது என்று யாரும் நினைக்க வேண்டாம். பஸ்சில் பீர் குடிக்க அரசு அனுமதிக்கவில்லை என்று இந்தப் பீர் பஸ் பயணத்தை ஏற்பாடு செய்யும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால், பேருந்தில் வருபவர்கள் 3 கோர்ஸ் உணவு, அன்லிமிடெட் பிரை, சைடிஷ் ஆகியவை கொடுக்கப்படுமாம். இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கி படுவேகமாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் அரசு அனுமதித்த இடத்தில் மட்டும் மது அருந்த அனுமதிக்கப்படும். 40 பயணிகள் சென்னையில் இருந்து புதுச்சேரி சென்றுவிட்டு அதே நாள் மீண்டும் சென்னை திரும்பலாம். வாரம் முழுவதும் பரபரப்பான பணிகளில் இருப்பவர்கள் வார இறுதி விடுமுறையில் ஜாலியாக புதுச்சேரிக்குச் சென்று புத்துணர்ச்சி அடையலாம்.