ஆட்சிக்கு வந்து 40 மாதம் ஆகுது! அரிசி போட உங்களுக்கு யோகியதை இல்லை! அதிமுக அன்பழகன் விளாசல்!
புதுச்சேரி மக்கள் இலவச அரிசி, மருத்துவ வசதிகள் மற்றும் மேம்பட்ட வடிகால் வசதிகள் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காகக் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புறக்கணிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: புதுச்சேரி மக்களின் நீண்ட நெடு நாள் கோரிக்கைகளான இலவச அரிசிக்கான பணம் போதுமானதாக இல்லை, பணத்திற்கு பதில் தரமான இலவச அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் புதுச்சேரியில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்ததிலிருந்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர் பெருமக்கள் சட்டபேரவை தலைவர்கள் அனைவரும் கடந்த 40 மாதங்களாக இலவச அரிசி வழங்கப்படும் பிரதமரை சந்தித்து விட்டோம் உடனடியாக வழங்கப்படும் என கூறி வருகின்றார். ஆனால் இதுவரை இலவச அரிசி வழங்கப்படவில்லை.
இலவச அரிசி வழங்குவது சம்பந்தமாக துணைநிலை ஆளுநர் அவர்கள் புதுச்சேரி அரசின் கொள்கை முடிவு என்ன? பணத்திற்கு பதிலாக இலவச அரிசி மாதந்தோறும் வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதா?அப்படி அனுமதி அளித்திருந்தால் எந்த மாதத்தில் இருந்து இலவச அரிசி வழங்கப்படும் என ஒரு தெளிவான விளக்கத்தை துணை ஆளுநராக வெளியிட வேண்டும்.
கடந்த வாரம் ஒரு மணி நேரம் பெய்த மழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். புதுச்சேரி நகரப்பகுதி முழுவதும் சாலைகள் நீரில் மூழ்கின. நகரப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகளில் மழை நீர் உட்புகுந்தது. இதையே அரசு ஒரு முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு நகரின் மழைக்கால வடிகால்களை அரசு மேம்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் முதலமைச்சர் தலைமையில் ஒரு கூட்டமும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு கூட்டம் என ஒரு போட்டோ சூட் வேலையை தான் செய்து வருகிறது.
தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு அரசு பொது மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லை. இது சம்பந்தமாக பலமுறை எடுத்து கூறியும், ஆளும் அரசு கண்டுகொள்வதே இல்லை. ஒரே ஒரு நாள் துணைநிலை ஆளுநர் அவர்கள் எந்தவிதமான முன்னரிவிப்பும் இல்லாமல் அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று அவசர படுக்கை பிரிவு வார்டை பார்வையிட வேண்டும். அப்போது தான் மக்கள் படும் வேதனைகளும், கஷ்டங்களும் துணைநிலை ஆளுநருக்கு புரியும் என்று குறிப்பிட்டார்.