புதுவையில் வெளிப்படையாக பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர்கள்
புதுச்சேரி நகரப் பகுதியான செஞ்சி சாலை மார்க்கெட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த டிப்டாப் வாலிபர்கள் மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் நேற்று பெரிய கடை காவல் துறையினர் நகரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது செஞ்சிசாலை மார்க்கெட் பகுதியில் டிப்டாப்பாக மூன்று நபர்கள் நின்று கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் வந்தது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மூன்று பேரை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் முத்தியால்பேட்டை பாரதிதாசன் வீதியை சேர்ந்த சச்சின், பில்கீஸ் வீதியை சேர்ந்த செல்வகுமார் அக்ரகாரம் பகுதியை சேர்ந்த மதிவாணன் என்பது தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் நடத்திய சோதனையில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ எடையிலான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3-பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கஞ்சா விற்பனை செய்த 3பேரை மடக்கி பிடித்த போலீசாருக்கு கிழக்கு பிரிவு எஸ்பி தீபிகா பாராட்டுகளை தெரிவித்தார்.