திமுக  தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தகவல் வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கிவந்தது. 2006-ம் ஆண்டில் திமுக ஆட்சியைப் பிடித்த பிறகு உள்ளாட்சித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மு.க. ஸ்டாலின் கூட்டத்தில் கத்தியோடு ஒருவர் வந்ததாக பிடிபட்டார். இதனையடுத்து அப்போது மத்திய அரசில் திமுக அங்கம் வகித்ததால், மத்திய அரசை வலியுறுத்தி ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. சுமார் 10 அஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டாலின் இசட் பிளஸ் பாதுப்பில் உள்ளார்.


இந்நிலையில் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பிரிவௌ மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தகவல் வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கனிமொழி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக தலைவர் அண்ணன் தளபதி அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த Z+பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழினத்துக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தளபதி அவர்களுக்கு கோடிக்கணக்கான தொண்டர்களும்,அவர்களது அன்புமே அரணாக அமையும்.” என்று அதில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சோனியா காந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. அவர்களுக்கு சிஆர்பிஎஃப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.