ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை இழக்கிறது. ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. 

17வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்தது. மக்களவை தேர்தலுடன் தமிழ்நாட்டில் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் ஆகியவையும் நடத்தப்பட்டன. இன்று காலை 8 மணிக்கு தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. மக்களவை தேர்தல் முடிவுடன் சட்டமன்ற தேர்தல் வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. ஆந்திராவில் சட்டமன்ற வாக்கு எண்ணிக்கையும் நடந்துவருகிறது. 

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மண்ணை கவ்வியுள்ளது. 175 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதில் 6ல் ஒரு பங்கைவிட குறைவான 23 தொகுதிகளில் மட்டுமே ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. 

எனவே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கட்டிலில் இருந்து இறங்க உள்ளார். மக்களவை தேர்தலிலும் தெலுங்கு தேசத்திற்கு மரண அடி விழுந்துள்ளது. ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மக்களவை தொகுதிகளில் 16ல் ஒய்.எஸ்.ஆர் முன்னிலை வகிக்கிறது. வெறும் 4ல் மட்டுமே தெலுங்குதேசம் முன்னிலை வகிக்கிறது.