மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் இளைய சகோதரரும் முன்னாள் அமைச்சருமான ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

கடப்பாவில் உள்ள அவர் வீட்டில் ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி தனியாக இருந்துள்ளார். நேற்று காலை பணியாட்கள் வேலைக்காக வந்தபோது நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

வீட்டினுள் சென்று பார்த்தபோது அவர் வீட்டின் குளியல் அறையில் ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி இறந்து கிடந்தார். அவரது உடலில் தலை மற்றும் கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலறிந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது தாய் விஜயம்மா ஆகியோர் விவேகானந்த ரெட்டியின் வீட்டுக்கு விரைந்தனர். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பிரேதப் பரிசோதனையில் அவர் கத்தியால் குத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான காயங்களும் உடலில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் விவேகானந்த ரெட்டி உயிரிழந்திருப்பது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது‌.