8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம் பெண் ஒருவர் தனது கழுத்தில் பிளேடு வைத்துக் கொண்டு அதிகாரிகளை மிரட்டிய சம்பவம் திருவண்ணாமலையில் நடந்துள்ளது.

சென்னை - சேலம் இடையே அமைக்க திட்டமிடபடும் புதிய 8 வழிச்சாலைக்கு விவசாயிகளிடையே பெரும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, நில அளவீடும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். நில அளவிட்டு நடுகல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நில அளவீட்டுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

திருவண்ணாமலை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் அதிகாரிகள் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகள் நட்ட நடுகற்களை பிடுங்கி எறிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். கிராம மக்களின் எதிர்ப்பால், நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

செய்யாறு, எருமைவெட்டி பகுதியில் 8 வழிச்சாலைக்காக நிலத்தை கையகப்படுத்த வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உயிரே போனாலும் நிலத்தை தரமாட்டோம் என்று பொதுமக்கள் கூறினர். அப்போது அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த இளம் பெண் ஒருவர், திடீரென தான் வைத்திருந்த பிளேடை எடுத்து கழுத்தில் வைத்துக் கொண்டு, நிலத்தை அளவிட வேண்டாம் என்றும் அப்படி செய்தால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டினார்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார், இளம் பெண்ணிடம் இருந்த பிளேடை பிடுங்கி எறிந்தனர். இளம் பெண்ணுக்கு கழுத்தில் கீறல்
ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.