2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டவர்கள், பெறப்போகிறவர்களின் வாக்குரிமையைப் பறித்து, தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என யோகா குரு பாபா ராம்தேவ் அதிரடியாக வலியுறுத்தி உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம், அலிகார் நகரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ’’நாட்டில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதிகரித்து வரும் மக்கள் தொகை கட்டுப்படுத்துவது அவசியம் நாட்டில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றிருந்தால், அவர்களிடம் இருந்து வாக்குரிமையைப் பறித்தால்தான் மக்கள் தொகைப் பெருக்கம் குறையும்.

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களிடம் இருந்து வாக்குரிமை மட்டுமல்லாமல், அரசின் சலுகைகள் அனைத்தையும் பறிக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் மக்கள் தொகைப் பெருக்கம் குறையும். 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. அவர்களின் குழந்தைகளுக்கு அரசு பள்ளிகளில் படிக்க இடம் அளிக்கக் கூடாது. அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுவதைத் தடை செய்ய வேண்டும்.

அரசு பணியும் வழங்கக் கூடாது. அப்படி செய்தால் மட்டுமே மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும்’’ என அவர் பேசினார். பிரம்மாசாரியாக வாழ்பவர்களை சிறப்பித்து மரியாதை தரவேண்டும் எனவும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.