ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற பொதுத்தேர்தல், என்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும்,  வெற்றி ஒன்றையே இலக்காக வைத்து செயல்பட வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக நேர்காணலின் போது உரையாற்றியுள்ளனர். சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் துவங்கி நடைப்பெற்று வருகிறது. 

சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட சுமார் 8250 பேர் விண்ணப்பித்துள்ளனர். விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணலை கட்சியின் ஆட்சிமன்ற குழு நேர்காணலை நடத்திவருகிறது. முன்னதாக இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர் அப்போது  பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,  பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளோம், 

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் ரத்து, சுய உதவிக்குழு கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை செய்துள்ளோம். தேர்தல் நெருங்கி வருவதாலும் திடீரென தேர்தல் அறிவித்துவிட்டதாலும், அனைவருக்கும் ஒரே நாளில் நேர்காணல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 15 க்கும் அதிகமானோர் விருப்பமனு வழங்கியுள்ளனர். ஆனால் ஒருவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும், அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலில் பணியாற்ற வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற பொது தேர்தல், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன அதனை முறியடித்து நான்காண்டுகளை கடந்துள்ளோம்.என கூறினார். 

அதன் பின்னர் உரையாற்றிய  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான்கு ஆண்டு காலம் ஜெயலலிதா சாதனைகள் அவர் கொண்டு வந்த திட்டங்கள் என எந்த வித சேதாரமும், குறைவுமில்லாமல் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். தற்போது வாய்ப்பில்லாதவர்களுக்கு தகுதியில்லை என்ற அர்த்தமில்லை, எல்லாருக்கும் பிறகு வாய்ப்பிருக்கிறது, வெற்றி பெறுவது மட்டுமே நம் இலக்கு, அதனை நோக்கி செல்ல வேண்டும். வேட்பாளர் நேர்காணலில் கலந்து கொண்டிருப்பவர்களில் யாராவது ஒருவர் கூட முதலமைச்சராகவோ, ஒருங்கிணைப்பாளராகவோ இருக்கலாம். அவ்வாறு அவர் பேசினார்.