உத்தரபிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. சாம்பல் மாவட்டம் சவுத்ரி சாராய் பகுதியில் ஒரு அரசு பஸ்சுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. சாம்பால் மாவட்டத்தில் இணையதள இணைப்பு துண்டிக்கப்பட்டது.

லக்னோவிலும் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அங்கு ஒரு போலீஸ் நிலையத்தின் வெளியே நின்றிருந்த வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியும், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீவைத்தும் ஒரு கும்பல் ரகளையில் ஈடுபட்டது. மடேய்கஞ்ச் பகுதியில் நடந்த இந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். 

அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 3 பேர் குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது பெயர் முகமது வாகில் என தெரியவந்தது. இதனால், உத்தர பிரதேசத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில், வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து , அவற்றை ஏலத்தில் விட்டு இழப்புகளை ஈடுகட்டுவோம் என்று உத்தர பிரதேச முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடம் கிடையாது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு என்ற பெயரில்,  சமாஜ்வாடி மற்றும் இடதுசாரி கட்சிகள் ஒட்டு மொத்த நாட்டையும் பதற்றத்துக்கு உள்ளாக்கி வருகிறன்றன. 

லக்னோ மற்றும் சம்பல் பகுதியில் வன்முறை ஏற்பட்டது. இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, ஏலத்தில் விட்டு, இழப்புகளை ஈடுசெய்வோம்” என்றார்.