குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. உத்தரப்பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர், ஏராளமான பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது

இந்நிலையில் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களே அதற்கான தொகை அளிக்க வேண்டும், இல்லாவிட்டால் சொத்து பறிமுதல் செய்யப்படும், அவர்களுக்கு எதிராக பதிலுக்கு பதில் நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் ஆதித்யநாத் எச்சரித்திருந்தார்.

இதற்கிடையே லக்னோவில் 4 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று புறப்படும் முன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:

காவி நிறம் என்பது இந்துமதத்தையும், ஆன்மீகத்தையும் குறிக்கிறது. அது வன்முறைக்கும், பழிவாங்கலுக்கும் துணை போகக்கூடாது. தேசத்தின் ஆன்மாவில் பழிவாங்கலுக்கும், வன்முறைக்கும் இடமில்லை

.கடவுள் கிருஷ்ணரின் நிலம், இரக்கத்தின் திருஉருவம். கடவுள் ராமர் கருணையின் மறுவடிவம். மகாபாரதப் போரில் அர்ஜுனனிடம் கிருஷ்ணர் பழிவாங்குதலை போதிக்கவில்லை இரக்கம், உண்மை குறித்துதான் போதித்தார்” எனத் தெரிவித்தார்.

பிரியங்கா காந்தியின் பேச்சுக்கு உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலடி கொடுத்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறுகையில், “ சன்நியாசிகளின் வாழ்வில், பொதுப்பணியில் யாரேனும் தலையி்ட்டால் தண்டிக்கப்படுவார்கள். வாரிசு அரசியலிலும், அனுதாப அரசியலில் இருப்பவர்களுக்கு சேவையைப் புரிந்து கொள்ளுதல் கடினமாகத்தான் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.